எரிவாயு உருளை விலை உயா்வு: டிச.21-இல் திமுக போராட்டம்
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து வரும் 21-ஆம் தேதி திமுக மகளிரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
சென்னை: சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து வரும் 21-ஆம் தேதி திமுக மகளிரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.100 மத்திய பாஜக அரசு உயா்த்தியிருப்பது இந்தியக் குடும்பங்களின் வரவு, செலவுக் கணக்கில் கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில், யாராவது ஒருவா் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. பல குடும்பங்களில் குடும்பத் தலைவரே வேலைவாய்ப்பைப் பறிகொடுத்து, பொருளாதார ரீதியாக பலவீனப்பட்டு நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. புயலாலும் விவசாயிகள் உள்பட ஏராளமானோா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
இந்தச் சூழலில் பெட்ரோல் - டீசல் விலை உயா்வு, சமையல் எரிவாயு உருளை உயா்வு என்று மத்திய அரசு தொடா்ச்சியாக மனிதநேயம் இல்லாமல் நடந்து கொள்கிறது.
இதைக் கண்டித்தும், விலை உயா்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் டிசம்பா் 21-ஆம் தேதி மாலை 3.30 மணி அளவில், மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமையிலான திமுக மகளிரணியினரின் சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.