தமிழ்நாடு

2021-ல் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்: முதல்வர் பழனிசாமி

DIN

2021-ல் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் எனறும், திமுகவின் ஒட்டுமொத்த தலைவர்களும் எடப்பாடி வந்தாலும் யாரும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பெரிய சோரகையில் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது, 31ஆண்டு காலம் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருபெரும் தலைவர்களை அடுத்து எனது தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

 ஓராண்டு கூட ஆட்சியை நடத்த முடியாது எனக் கூறிய எதிர்க்கட்சிகள் மத்தியில் 4 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு சோதனைகளை சந்தித்து ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்.

குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் பல சோதனைகளை கடந்து வந்தோம். அதற்கு பின்பு புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பெரிய அளவில் தமிழகம் பாதிப்பு ஏற்பட்டது. அத்தனை பிரச்னைகளையும் அரசு துரித நடவடிக்கை எடுத்து சரி செய்தது. இந்திய அளவில் சிறப்பான நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக அரசு எனவும் தெரிவித்தார்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இன்று வரை அந்த நோய் இருந்து வருகிறது. அந்த வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது.

உலக சுகாதார அமைப்பு மத்திய சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை எடுத்துக் கொண்டு தமிழக அரசு சிறப்பான முறையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தி உள்ளது. மற்ற மாநிலத்தை விட படிப்படியாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்று ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழக அரசின் நிர்வாகமும் சுகாதார துறையும் சிறப்பாக செயலாற்றியதன் காரணமாக கரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் கரோனா வைரஸ் குறித்து கேட்டபோது இரண்டு நாள்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்குக் கூட தொற்று இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர், நீண்ட நாள் நாம் எடுத்துக்கொண்ட பணிகளுக்கு கிடைத்த பலன் என தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டினார். மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் சிறப்பாக கட்டுப்படுத்துகிறார்கள் என இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவில் மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழக அரசு சரியான முறையில் இந்த கரோனா வைரஸ் தடுப்பு வழிகளை மேற்கொண்டதன் விளைவாக  குறைந்து இருக்கிறது எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் கட்டுப்படுத்துவது போல் மற்ற மாநில அரசும் அதை பின்பற்றி  வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக அரசை விமர்சனம் செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் நல்லது நடக்கும் செயலை அதிமுக அரசு செய்து வருகிறது. இருப்பினும் அதற்கு மாற்றாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.

உள்ளாட்சித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து ஏரிகளும் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் நீர் சேமிப்பு அதிகரித்துள்ளது.

மழைக்காலங்களில் இருக்கும் மழை நீரை நதிகளில் இருந்து சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. 406 கோடி ரூபாயில் புதிய கதவணை கட்ட தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. நீர் மேலாண்மையை சரியாக செயல்படுத்த தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டு நீர் மேலாண்மையில் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதை தமிழக அரசு பெற்றுள்ளது.

இந்தியாவில் உபரி மின்சாரம் செய்யும் மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மின் மிகை மாநிலமாக தமிழகம் தொடர்ந்து உள்ளது. 

உலகத்தில் உள்ள மற்ற பெரு நிறுவனங்கள் தமிழகத்தை தேர்ந்தெடுத்து தொழில் துவங்க முன்வந்துள்ளன. 304 தொழிற்சாலைகள் அமைக்க இதுவரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது,

 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் காலத்தில் கூட தமிழகத்தில் மட்டும்தான் தொழில் துவங்க தொழிலதிபர்கள் முன்வந்தார்கள்.

 படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கிறது வேளாண்மைத் துறையில் வரலாற்று சாதனையை தமிழக அரசு பெற்றுள்ளது அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பல லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும்  உயர்கல்வி படிக்கும் சதவீதம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது,

 சுகாதாரமான குடிநீர் கிடைக்க நங்கவல்லி கூட்டுக் குடிநீர் திட்டத்தை எடப்பாடி தொகுதியில் செயலாற்றி வருகிறோம் என தெரிவித்தார். பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், கால்நடை மருத்துவம், கல்லூரி, நெசவுக்தொழில் மேம்படுத்த பெங்களூருவரை பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. 15 பேருந்துகள் விடப்பட்டது,

 பள்ளிகள், சமுதாய கூடம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது,

எடப்பாடி தொகுதி அதிமுக வின் எஃகு கோட்டை எனவும் இது வரை திமுக வெற்றி பெறாத தொகுதியாக எடப்பாடி தொகுதி உள்ளதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.

கனிமொழி எடப்பாடி வந்தபொழுது அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என பேசி இருக்கிறார். வேண்டும் என்றால் அவரை இங்கு வந்து போட்டியிடச் சொல்லுங்கள் யார் வெற்றி பெறுவார்கள் என பார்க்கலாம் எனவும் கருத்து தெரிவித்தார்.

 எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது எனவும், தன்னை பழனிசாமி என தற்போது அதிகம் அழைப்பதில்லை எடப்பாடியார் என மக்கள் அன்போடு அழைக்கின்றனர் எனவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

மக்களுக்கு சிறப்பான பங்கை அளித்து அதன் காரணமாக இந்தப் பெயர் எனக்கு மக்கள் அளித்துள்ளனர். நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன் எனவும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தேன் எனவும் தெரிவித்தார். மாணவர்களின் எண்ணங்கள் நன்கு அறிந்ததால் மாணவர்களுக்குத் தேவைப்பட்ட திட்டங்களை வகுத்து வருவதாகவும் தெரிவித்தார் .

அரசு பள்ளியில் படிக்கும் 41% மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி உள்ள அரசு அதிமுக அரசு எனவும் மருத்துவ மாணவர்களின் கனவை நனவாக்கிய அரசு அதிமுக அரசு எனவும் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் மட்டும் 26 பேர் மருத்துவ மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் ஆறு இடங்களில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அரசு இப்பிரச்சனையில் கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 313 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அதேபோல் பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. ஏழை மாணவர்கள் எண்ணற்றோர் இன்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சூழலை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தப் பகுதியில் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். இந்த பகுதியில் இருக்கக்கூடிய ஏரிகளை தூர்வாரி செம்மைபடுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.  தற்போது வறண்ட 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது எனவும் எடப்பாடி தொகுதியில் மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகள் உள்ளாட்சி சாலைகள் என அனைத்தும் தார் சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதி, கல்வி, கல்லூரி, கால்நடை மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்கள் முதியோர் உதவித்தொகை கேட்டபொழுது அனைவருக்கும் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமை அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று குறைகளை கேட்கும் அளவிற்கு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி உள்ளேன். அதில் அதிகமாக தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா மாறுதல், பட்டா உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் பலருக்கு வீடு வழங்கி உள்ளோம் .

திமுகவில் கனிமொழி அல்ல திமுகவின் ஒட்டுமொத்த தலைவர்களும் எடப்பாடியில் வந்து பிரசாரம் செய்தாலும் திமுக வெற்றிபெறாது எனவும், மற்றும் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த முதல்வர் பழனிசாமி, 2021 ஆம் ஆண்டில், அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.

தமிழக அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பொதுமக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் உழைப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT