முகப்பு
தமிழ்நாடு

டிராக்டர் மோதி சிறுவன் பலி: உறவினர்கள் திடீர் சாலை மறியல்

மோகனூர் அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலியான சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட ஆண்டாள்புரம் கிராம மக்கள்.
பகிர்:

நாமக்கல்: மோகனூர் அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலியான சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் ஆண்டாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு-பவித்ரா தம்பதியரின் மகன் கீர்த்தி வாசன் (7). இவர் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நண்பர்கள் சிலருடன் சிறுவன் கீர்த்திவாசன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஜல்லி கற்கள் லோடு ஏற்றி வந்த டிராக்டர் கீர்த்தி வாசன் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிராக்டரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுப்பிரமணியன்(45) தப்பியோடிவிட்டார். தகவலறிந்து வந்த மோகனூர் போலீஸார் சிறுவன் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்மந்தப்பட்ட ஓட்டுநர் சுப்பிரமணியனை கைது செய்யக்கோரியும், சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும் அவரது உறவினர்கள், ஆண்டாள்புரம் கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன்பாக நாமக்கல்- மோகனூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா வந்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். நாமக்கல் காவல் ஆய்வாளர் பொன்.செல்வராஜ், மோகனூர் ஆய்வாளர் கணேசன், சேந்தமங்கலம் ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆண்டாள்புரம் கிராம மக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறுவன் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோர் வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →