முகப்பு
தமிழ்நாடு

திருச்சி மாவட்டத்தில் 58 அம்மா மினி கிளினிக்; 4 இடங்களில் அமைச்சர்கள் தொடக்கிவைத்தனர்

திருச்சி மாவட்டத்தில் 58 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. இதில், முதல்கட்டமாக 4 கிளினிக்குகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
திருச்சியில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கிவைத்த அமைச்சர்கள்
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 58 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. இதில், முதல்கட்டமாக 4 கிளினிக்குகளை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் புதன்கிழமை தொடங்கி வைத்தனர்.

உழைக்கும் வர்க்கத்திற்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காக அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழக முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. இதில், முதல்கட்டமாக 630 மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவித்து கடந்த 14ஆம் தேதி சேலத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.

திருச்சியிலும் இந்தத் திட்டத்தில் 58 அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், அமைக்கப்படும் இந்த மருத்துவமனைகளில் 4 இடங்களில் புதிய கிளினிக் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

திருச்சி தென்னூரில், மேம்பாலத்தின் கீழே ஒரு கிளினிக், சங்கிலியாண்டபுரம் சுப்பையாபிள்ளை தெரு பகுதியிலும், கே.கே. நகர் அருகேயுள்ள கே. சாத்தனூரிலும், தாயானூரிலும் தலா ஒரு அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் ஆரோக்கிய மருந்து பெட்டகங்களை வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியது:

காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடி தங்களுடைய நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு இங்கேயே ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இருந்து, அங்கு வருகின்ற நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பர்.

ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கிலும் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஏதாவது சிறிய நோய்கள் ஏற்படின் இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்ற சூழ்நிலை ஏற்பட்டால், வட்டாரத் தலைமை மருத்துவமனைக்கோ அல்லது அரசு தலைமை மருத்துவமனைக்கோ அனுப்பி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, குணமடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த விழாவில், ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன், மாநகர நகர் நல அலுவலர் யாழினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.