முகப்பு
தமிழ்நாடு

மோடியே தடை போட்டாலும் திமுகவின் கிராமசபை கூட்டங்கள் தொடரும்: மு.க. ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடியே தடை போட்டாலும் திமுகவின் கிராமசபை கூட்டங்கள் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
மரக்காணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசும்  ஸ்டாலின்.
பகிர்:


விழுப்புரம்: பிரதமர் நரேந்திர மோடியே தடை போட்டாலும் திமுகவின் கிராமசபை கூட்டங்கள் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களில் ஏராளமான மக்கள் திரண்டதால் பொறுத்துக் கொள்ள முடியாத முதல்வர் பழனிசாமி தடை போட்டுள்ளார். இதற்கு அச்சப்பட்டு மக்கள் கிராமசபை கூட்டம் என மாற்றவில்லை. பிரதமர் மோடியே வந்து தடை போட்டாலும் இந்த கிராமசபை கூட்டங்கள் தொடரும்.

திமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது.
இன்னும் 4 மாத காலத்தில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக மகிழ்ச்சியாக மக்கள் திரண்டுள்ளனர்.

ஏதோ திமுக தான் ஆளும் கட்சி என்ற நம்பிக்கையில் குறைகளை மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் சபை கூட்டத்தில் மூலம் இரண்டு நாளில் 50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். 5 கோடி பேர் அளவில் இணைய வழியிலும் இதனை தொடர்ந்துள்ளனர்.

நாட்டின் நெருக்கடி காலத்தில் தலைவர் கருணாநிதி குரல் கொடுத்ததை போல் தற்போதைய நெருக்கடிக்கும் நான் குரல் கொடுத்து வருகிறேன்.

மாநில உரிமைகளை இந்த அரசு விட்டுக் கொடுத்து வருகிறது ஜனநாயகத்தை பாதுகாக்கவே நாம் குரல் கொடுத்து வருகிறோம்.

அதிமுக அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம். முதல்வர் மீதான ஊழல் புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுகிறார் பழனிச்சாமி.

2ஜி வழக்கில் ராசா, கனிமொழி போன்றோர் நேரடியாகச் வழக்கை சந்தித்து வெளியே வந்தனர். எந்த திமுகவினர் மீது ஊழல் வழக்கு நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அதிமுக ஆட்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதா போன்றோர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இப்போதும் சிலர் சிறையில் உள்ளனர்.

நாங்கள் அளித்த புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். ஆட்சி மாற போகிறது என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி மாறிய பிறகு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
 
எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட சர்க்காரியா வழக்கு கூட நிரூபிக்கப்படவில்லை.  எங்களை குடும்ப கட்சி என விமர்சிக்கிறார்கள். நான் 13 வயதில் இருந்து கட்சிக்காக உழைத்து பல நிலையில் வந்தே தலைவராக வந்துள்ளேன்.
குடும்பத்தினர் ஒரு கட்சிக்காக பணியாற்றுவது தவறில்லை.
குடும்ப அரசியல் கட்சியாக இருக்கலாம், பழனிச்சாமி போல், ஊழல் குடும்ப கட்சியாக இருக்கக்கூடாது என்றார் ஸ்டாலின்.

இதனையடுத்து பெண்கள், வியாபாரிகள் இளைஞர்கள் என அப்பகுதி கோரிக்கை மற்றும் குறைகளை தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →