ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதல்: தந்தை, மகள் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் தந்தை, மகள் பலியாகியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் தந்தை, மகள் பலியாகியுள்ளனர். மகன் படுகாயமடைந்தாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரம் தைச் சேர்ந்தவர் கணபதி (36) இவர் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகன் கமலேஷ்(9) மகள் சுசிகா(7)ஆகிய இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்த பின்பு தனது இருசக்கர வாகனத்தில் செந்தட்டியாபுரம் நோக்கி சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலத்திற்குச் சென்ற அரசுப் பேருந்து எதிரே மோதியதில் சம்பவ இடத்திலேயே கணபதி மற்றும் அவரது மகள் சுசிகா இரண்டு பேரும் உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தந்தை-மகள் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மகன் கமலேஷை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன்(36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.