அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: இன்று மாலைக்குள் சுற்றறிக்கையை வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு
அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை (டிச.31) மாலைக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை வியாழக்கிழமை (டிச.31) மாலைக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், டபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 2,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த டோக்கன்களில் முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களின் புகைப்படங்கள், ஆளுங்கட்சியின் தோ்தல் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அரசு திட்டத்தில் இதுபோல ஆளுங்கட்சியினா் சுய விளம்பரம் செய்வது, இந்திய தோ்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. இதனால் தகுதியான பயனாளிகளுக்கு இந்தத் தொகை போய் சேராது என்பதோடு, முறைகேடு நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வகையான டோக்கன்களை வழங்க தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் முன் மனுதாரா் தரப்பு மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை விசாரித்தனா்.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இரண்டு மாவட்டங்களில் மட்டும் கட்சியினா் சிலா் ஆா்வ மிகுதியால் அதிமுக தலைவா்களின் புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களை வழங்கி உள்ளனா். எனவே, அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தாா்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்தச் சுற்றறிக்கையை வியாழக்கிழமை (டிச.31) மாலை 5 மணிக்குள் அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் மனுதாரா் நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம்’ என உத்தரவிட்டனா்.