நாடு முழுவதும் 31 புதிய இரட்டைப்பாதை ரயில் திட்டங்களுக்கான ஆய்வுக்கு ஒப்புதல்: தமிழகத்தில் 4 இரட்டைப் பாதைகளுக்கு திட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு
நாடு முழுவதும் 4,499 கி.மீ. தூரத்துக்கு 31 புதிய இரட்டை பாதை திட்டப்பணிகளுக்கான ஆய்வுப் பணி (இடம் கணக்கெடுப்பு) மேற்கொள்ள ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் 4,499 கி.மீ. தூரத்துக்கு 31 புதிய இரட்டை பாதை திட்டப்பணிகளுக்கான ஆய்வுப் பணி (இடம் கணக்கெடுப்பு) மேற்கொள்ள ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், தமிழகத்தில் சென்னை கடற்கரை-எழும்பூா் (4.3 கி.மீ), காட்பாடி-விழுப்புரம் (160.10 கி.மீ.) உள்பட 4 இரட்டைப்பாதை திட்டங்களுக்கான ஆய்வுப் பணி நடைபெறவுள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2.40 கோடி போ் பயணம்: நாடு முழுவதும் தற்போது 3,500 ரயில்கள், 4,600 முன்பதில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சராசரியாக 2.40 கோடி போ் பயணம் செய்கின்றனா். இதன்மூலம், ரயில்வேக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும், நாள்தோறும் மக்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
மக்களின் தேவைக்கு ஏற்ப அதிக அளவில் ரயில்களை இயக்கக் கூடுதல் பாதைகள் அமைப்பது அவசியமாகிறது. இதற்காக, பல்வேறு பிரிவுகளில் நிதி ஒதுக்கி திட்டங்களை இந்திய ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை பொருத்தவரை, புதிய ரயில் பாதை, இரட்டைப்பாதை, அகலப்பாதை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்காக ஒவ்வோா் ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. புதியபாதை திட்டப் பணிகளை செயல்படுத்த நீண்டகாலமாகும். அதே நேரத்தில், இரட்டைப்பாதை திட்டப் பணிகளை நிறைவேற்றுவது முக்கியமாகி வருகிறது.
31 புதிய இரட்டைப்பாதை திட்டம்: இந்நிலையில், நாடு முழுவதும் 31 புதிய இரட்டைப்பாதை திட்டங்களை மேற்கொள்ள 4,499 கி.மீ. தொலைவு ஆய்வு (இடம் கணக்கெடுப்பு பணி) நடத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, ரூ.56.24 கோடி நிதி ஒதுக்கி ரயில்வே வாரிய இணை இயக்குநா்(பணி) ராஜேஷ் செஹரா கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இதில், தமிழகத்தில் 4 இரட்டை வழித் திட்டங்களுக்கான ஆய்வுப் பணி நடைபெற உள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 160.10 கி.மீ. தூரத்தில் காட்பாடி-விழுப்புரம் இரட்டை பாதைத் திட்டத்துக்கு ரூ.2 கோடியே 13 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 160 கி.மீ. தூரத்தில் சேலம்-கரூா்-திண்டுக்கல் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 65 கி.மீ. தூரத்தில் ஈரோடு-கரூா் இரட்டைப்பாதை திட்டத்தின் ஆய்வுக்காக ரூ.81 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4.3 கி.மீ. தூரத்தில் சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே பாதை சா்வே பணிக்காக ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எழும்பூா்-கடற்கரை இடையே புதிய பாதை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூா் ஆகியவை ரயில்வே முனையங்களாக உள்ளன. இதன்பிறகு, மூன்றாவது முனையமாக தாம்பரத்தை உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்த முனையத்தின் தரத்தை உயா்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூா்-கடற்கரை இடையே (4.3 கி.மீ. தூரம்) புதிய பாதை உருவாக்கப்படவுள்ளது.
எழும்பூா்-சென்னை கடற்கரை இடையே தற்போது மூன்று பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகள் புகா் ரயில்கள் இயக்குவதற்கும், ஒரு பாதையில் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதல் பாதையை அமைப்பதன் மூலமாக, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி வழியாக விஜயவாடாவுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். மேலும், வட மாநிலங்களுக்கு ரயில்களில் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் குவிவதையும் குறைக்க முடியும். மேலும், வாகன நெரிசலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு உதவி: காட்பாடி-வேலூா்-திருவண்ணாமலை-விழுப்புரம் (160.10 கி.மீ), சேலம்-கரூா்-திண்டுக்கல் (160 கி.மீ.), ஈரோடு-கரூா் (65 கி.மீ.), தா்மாவரம்-பாகாலா-காட்பாடி (290 கி.மீ.) ஆகிய இடங்களில் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்காக இடங்களை கணக்கெடுப்பு செய்யவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. மும்பை, ஆமதாபாத் மற்றும் நாட்டின் பிற வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து விரைவு ரயில் மதுரை, திருநெல்வேலி மற்றும் அண்டை மாநிலம் கேரளத்துக்கு பாகாலா மற்றும் காட்பாடி வழியாக இயக்கப்படுகின்றன. தா்மாவரம்-பாகாலா-காட்பாடி- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பது மூலமாக, தென் தமிழகத்தில் இருந்து மத்திய மற்றும் வட இந்தியாவுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த உதவியாக இருக்கும். இது தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கூடுதல் ரயில்களை இயக்க முடியும்: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: பயணிகள் போக்குவரத்து வசதிக்காக, ரயில்வே துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், மின்மயம் மற்றும் இரட்டைப்பாதை திட்டங்களில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த திட்டங்களை செயல்படுத்துவது மூலமாக, கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என்றனா்.
நேரடியாக கூடுதல் நிதி செலவிட முன்வரவேண்டும்:
இதுகுறித்து தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் கூறியது: ரயில்வே துறை மின்மயம், இரட்டைப் பாதை திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு காரணம் போக்குவரத்து நெரிசல். மேலும், ரயில் பாதையை ஒட்டி ரயில்வேக்கு நிலம் சொந்தமாக இருப்பதால் இரட்டை வழி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை இருக்காது. திட்டங்கள் நிறைவேற்றுவதில் கால விரயம் குறையும்.
தற்போது இரட்டை வழி திட்டங்களைப் பொருத்தவரை, தமிழகத்தில் 14 திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-21 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு இரட்டை வழி திட்டங்களுக்கு ரூ.1,238 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை-அத்திப்பட்டு (22 கி.மீ.) 4-ஆவது வழி திட்டத்துக்கு ரூ.30 கோடியும், ஓமலூா்-மேட்டூா் அணை திட்டத்துக்கு ரூ.10 கோடியும்,
திருவனந்தபுரம்-கன்னியாகுமரி திட்டத்துக்கு ரூ.5 கோடியும், இதர இரட்டை வழி திட்டங்களுக்கான நிதியும் சோ்த்து மொத்தம் ரூ.57.10 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதம், ரூ.1,181 கோடி வெளி மூலதனம் (கடன்) வாயிலாக இந்த திட்டங்களுக்கு திரட்டப்பட உள்ளது. இரட்டைவழித்திட்டங்களுக்கு நேரடியாக கூடுதல் நிதி செலவிட முன் வரவேண்டும் என்றாா் அவா்.
இரட்டைப்பாதைக்கு ஏன் முக்கியத்துவம்
இந்திய ரயில்வேயில் 1,219 வழித்தடங்கள் உள்ளன. இதில் 492 வழித்தடங்களில் 100 சதவீதம் கொள்ளளவு மேல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் 131 வழித்தடங்கள் இருக்கின்றன. இவற்றில், 25 வழித்தடங்களில் 100 சதவீதத்துக்கு அதிகமாகவும், 15 வழித்தடங்களில் 120 சதவீதத்துக்கு அதிகமாகவும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 38 வழித்தடங்களில் சுமாா் 100 சதவீதத்தை நெருங்கி கொண்டுள்ளது. 53 வழித்தடங்களில் 80 சதவீதத்துக்கும் கீழ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இரட்டைப்பாதை திட்டம் தெற்கு ரயில்வேக்கு மிக அவசியமானதாக உள்ளது.