தமிழகத்தில் முதல்முறையாக பெரியார் பல்கலை.யில் அடர்வனம் உருவாக்கும் பணிகள் தொடக்கம்
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 'மியாவாகி' முறையில் அடர்வனம் உருவாக்கும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 'மியாவாகி' முறையில் அடர்வனம் உருவாக்கும் பணி நடைபெற்றது.
குறைந்த நிலப்பரப்பில் அடர்த்தியான மரங்களை வளர்த்தெடுக்கும் 'மியாவாகி' காடு வளர்ப்பு முறை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 'மியாவாகி' முறையில் அடர்வனம் உருவாக்கும் பணிகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
சேலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகம் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியரின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. கல்விசார் பணிகளுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு பணிகளில் பெரியார் பல்கலைக்கழகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டுநலப்பணித் திட்டத்தில் மாணவர்களால் வாரந்தோறும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, 'மியாவாகி' முறையில் அடர்வனம் உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், சே ட்ரீ (say tree) அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டப் பணிகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல், மாணவ-மாணவியருக்கு மரக்கன்றுகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.
முதலாவதாக வேம்பு மரக்கன்றினைத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் நட்டு அடர்வனம் உருவாக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, மாணவ-மாணவியர், பர்ஸ்ட் அமெரிக்கன் இந்திய நிறுவனப் பணியாளர்கள் 'மியாவாகி' முறையில் மரக்கன்றுகளை நட்டனர். முதல்கட்டமாக இதில் 55 வகையான 1350 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சே ட்ரீ(say tree) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுசூதனன், பர்ஸ்ட் அமெரிக்கன் இந்திய நிறுவன சேலம் மைய இயக்குநர் சங்கீதா ப்ளோரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.