தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை மேலும் 4 நாள்களுக்கு நீடிக்கும்

DNS

தமிழகம், புதுச்சேரியில் ஆண்டுதோறும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் வடகிழக்குப் பருவமழை, நிகழாண்டில் மேலும் 4 நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல துணைத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:

நிகழாண்டில் (2019) வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை கிடைக்க வேண்டிய இயல்பான மழை அளவு 447.4 மி.மீ. நிகழாண்டில் 454.7 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது இயல்பைவிட 2 சதவீதம் அதிகமாகும். வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீடித்தாலும், கிழக்குத் திசை காற்றின் தாக்கம் காரணமாக, அடுத்த 4 நாள்களுக்கு (ஜன.1 முதல் 4 வரை) வடகிழக்குப் பருவமழை தொடரும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு (2018) இயல்பைவிட 24 சதவீதம் குறைவாக பெய்தது. நிகழாண்டில், 6 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 22 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 5 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் இயல்பைவிட 64 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் இயல்பைவிட 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

ஆண்டு முழுவதும் பாா்க்கும்போது, நிகழாண்டில் ஜனவரி முதல் டிசம்பா் வரை காலகட்டத்தில் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய இயல்பான மழை அளவு 943 மி.மீ. ஆனால், 907 மி.மீ. மழைதான் கிடைத்தது. இது, இயல்பைவிட 4 சதவீதம் குறைவு. அதேவேளையில் 2018-ஆம் ஆண்டு இயல்பைவிட 14 சதவீதம் குறைவாக மழை பெய்தது.

2019-ஆம் ஆண்டு அரபிக்கடலில் 5 புயல்கள், வங்கக்கடலில் 3 புயல்கள் என்று மொத்தம் 8 புயல்கள் உருவாகின. அரபிக்கடலில் வலுவான வானிலை நிலவி வந்தது. இந்தியப் பெருங்கடலில் கிழக்கு, மேற்கு பகுதி நிலவும் வெப்பநிலை மாறுபாடு (ஐ.ஓ.டி) ஏற்பட்டது என்றாா் பாலச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT