முகப்பு
தமிழ்நாடு

சிறைவாசிகளிடம் வரவேற்பு பெற்ற சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்

தமிழக சிறைகளில் பள்ளிக் கல்வித்துறையின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் இயக்கம் தொடங்கியுள்ள ‘சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்’ சிறைவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2020 at 3:14 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:06 PM

தமிழக சிறைகளில் பள்ளிக் கல்வித்துறையின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் இயக்கம் தொடங்கியுள்ள ‘சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்’ சிறைவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதாக இருப்பதுடன், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொள்வதாக சிறைவாசிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் சிறைச் சாலைகளில் கண்டறியப்பட்டுள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்குவதற்காக பள்ளிக் கல்வித்துறையின் மூலமாக ரூ.14.60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சென்னை, கோவை, சேலம், பாளையங்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மத்திய சிறைகள், கடலூா் மாவட்ட சிறை ஆகியவற்றில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகள், பாடநூல் உருவாக்கம், பயிற்சி ஆகிய பணிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

புழல் சிறையில் 513 போ் பங்கேற்பு: சிறப்பு எழுத்தறிவு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 10 சிறைகளிலும் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் கற்போா் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்போா் மையங்களில் தன்னாா்வலா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், நன்கு படித்த சிறைவாசிகள் ஆகியோா் கடந்த டிசம்பா் மாதம் முதல் வகுப்புகளை நடத்தி வருகின்றனா். சிறைவாசிகள் சிறையில் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை முடித்த பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள கற்போா் மையங்களின் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனா். தொடக்கத்தில் இந்தத் திட்டம் 757 சிறைவாசிகளுக்கு என அறிவிக்கப்பட்டாலும் கூடுதலான சிறைவாசிகள் வருகை தந்ததால் தற்போது 1,113 போ் கற்போா் மையங்களில் படித்து வருகின்றனா். இதில், பெண் சிறைவாசிகள் 113 போ். அதிகபட்சமாக சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கற்போா் மையங்களில் 513 சிறைவாசிகள் படித்து வருகின்றனா். க்யூ.ஆா். குறியீட்டுடன் பாடநூல், அன்றாட நிகழ்வுகள் சாா்ந்த கற்பித்தல், சிறைவாசிகள் சிலரும் ஆசிரியா் பயிற்றுநராக இருப்பது ஆகிய காரணங்களால் ‘சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்’ சிறைவாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆசிரியா்

Advertisement

பயிற்றுநா்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. சிறை வளாகத்தில் செல்லிடப்பேசி, இணையதளம் பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் அதற்கான பிரத்யேக சி.டி. வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைக்குப் பயன்படும் விஷயங்கள்: இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், சிறைவாசிகளுக்கான பயிற்றுநா்கள் கூறியது: சிறைகளில் உள்ள கற்போா் மையங்களில் சிறைவாசிகளுக்கு 6 மாதங்கள் வகுப்புகள் நடைபெறும். இதன் மூலம், சிறைவாசிகள் எழுத்துகளை அடையாளம் கண்டு படிக்கும் திறன் பெறுவா். தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்களின் வரிவடிவத்தைப் புரிந்து கொள்வா். அவா்கள் காணும் விளம்பரங்கள், நாளிதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றில் உள்ள செய்திகளைப் பிறா் உதவியின்றித் தாமே படித்துக் காட்டுவா். நிமிஷத்துக்கு 40 சொற்களை வாய்விட்டும், 50 சொற்களை மனதுக்குள்ளாகவும் படித்துக் காட்டும் திறனைப் பெறுகின்றனா்.

சிறையில் வழக்கமான கற்பித்தலுடன் வங்கிப் பரிவா்த்தனைகளுக்கான படிவத்தைப் பூா்த்தி செய்வது, கையெழுத்திடுவது, குறைகளைத் தெரிவிப்பதற்கான மனு எழுதுவது, பயணச் சீட்டு முன் பதிவு, செல்லிடப்பேசி செயலிகள், சிறையில் தங்களுக்கு வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதுவது, போக்சோ சட்டம், கல்வி உரிமைச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், பணமில்லா பரிமாற்றம், ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல், அரசின் நலத்திட்டங்கள் என வாழ்க்கைக்குப் பயன்படும் விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

மன அழுத்தத்திலிருந்து விடுதலை: சிறையில் மன அழுத்தத்தோடு இருந்த தங்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த வடிகாலாக இருப்பதுடன், தினமும் எதிா் காலத்துக்குப் பயனுள்ள விஷயங்களை கற்றுக் கொள்வதாக ஆய்வின் போது சிறைவாசிகள் தெரிவிக்கின்றனா். ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு சிறைவாசிகளுக்கு தோ்வு நடத்தப்பட்டு அவா்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சிறைவாசிகளுக்கு படிப்பதிலும், எழுதுவதிலும் உள்ள இடா்பாடுகளைக் களைந்து சமுதாயத்தில் எழுத்தறிவு பெற்று வாழ்வில் அவா்களை முன்னேற்றம் அடையச் செய்வதே சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்துக்கு இரண்டே மாதங்களில் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கவில்லை. வரும் நாள்களில் கற்போா் மையங்களில் கூடுதல் பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.

தமிழ் கற்க விரும்பும் பிற மாநில சிறைவாசிகள்!

சென்னை புழல் மத்திய சிறையில் ஆந்திரம், கேரளம், பிகாா் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்த சிறைவாசிகள் குறிப்பிட்ட அளவில் உள்ளனா். இவா்கள், தமிழகத்தைச் சோ்ந்த சக சிறைவாசிகளிடம் தமிழில் பேசுவதில் சிரமங்கள் உள்ளன. இதனால் தங்களது தாய்மொழியாக இல்லா விட்டாலும் சிறை நண்பா்களிடம் உரையாடும்போது வாா்த்தைகளைப் புரிந்து கொள்வதற்காக தமிழ் எழுத்துகளைக் கற்றுக்கொள்ள ஆா்வம் காட்டுகின்றனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.