என்.எல்.சி. விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி கோரிக்கை
என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி தர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி தர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை காலை கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
தொடர்ந்து, நெய்வேலி விபத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும், மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனக் கூறியதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவிடம் பேசியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்றைய தினம் (1.7.2020) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்னை தொடர்பு கொண்டு என்.எல்.சி. விபத்து பற்றி விசாரித்த போது, நான் மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறினேன்.
மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட கோரிக்கை வைத்துள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.