முகப்பு
தமிழ்நாடு

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை: முதல்வர் பழனிசாமி உத்தரவு

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Updated On : 2 ஜூலை, 2020 at 5:28 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:22 PM

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள்.

Advertisement

இந்நிலையில், வழக்கறிஞர்களின் நலன் கருதி, இறந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நல உதவி வழங்கிடும் திட்டத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை 2 இலட்சம் ரூபாயிலிருந்து 5.25 இலட்சம் ரூபாயாக ஆக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 30.1.2018 அன்று, இந்நலநிதியை 5.25 இலட்சம் ரூபாயிலிருந்து 7 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. 

சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும்.

கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இக்கால கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது.

இதுபோன்று தற்போது வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு சிறப்பான திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. இதன்படி இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.