முகப்பு
தமிழ்நாடு

பழைய முறையிலேயே மின் கட்டணம் கணக்கிடப்படும்: உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் தகவல்

பொதுமுடக்க காலத்தில், முந்தைய மின்கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

பொதுமுடக்க காலத்தில், முந்தைய மின்கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், கரோனா பொதுமுடக்கத்தின் காரணணாக வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கும், தாழ்வழுத்த மின் பயன்பாட்டாளர்களுக்கும் முந்தைய காலங்களில் செலுத்திய மின் கட்டணத்தையே தற்போது செலுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

நிலைமை சீரானதும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, பயன்பாட்டாளர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகை போக எஞ்சியத் தொகை வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 4 மாதங்களுக்கு மொத்தமாக மின் நுகர்வைக் கணக்கீடு செய்வதால் வழக்கத்தை விட அதிகமான மின் கட்டணம் செலுத்தும் நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மின் நுகர்வோர்கள் கடந்த 4 மாதங்கள் பயன்படுத்திய மின்சாரத்தை மொத்தமாக கணக்கிடாமல், இரண்டு மாதங்களாக பிரித்து மின் நுகர்வைக் கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் கட்டணத்தை நிர்ணயிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுமுடக்க காலத்தில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? என கேள்வி எழுப்பி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், மின் வாரியம் மேற்கொள்ளும் மின்கட்டண கணக்கீட்டின்படி, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கபடுவதாக கூறி விளக்க மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு தரப்பில், மின்சார சட்ட விதிகளின்படி, பொதுமுடக்க காலத்தில், முந்தைய மின்கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. 

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என தெரிவித்தார். மேலும், பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், மின் பயன்பாடும், மின் கட்டணமும் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.