தமிழ்நாடு

மலைக் கிராம மக்களுக்கு மாற்றுக் கல்வி முறையில் விழிப்புணர்வு கல்வி

எஸ்.வெங்​க​டா​ச​லம்

போடி அருகே மலைக் கிராம மக்களுக்கு மாற்றுக் கல்வி முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் பழங்குடியின மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியில் செயல்பட்டு வருகிறது பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கு காலத்தில் இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்க விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

தற்போது கரோனா பொதுமுடக்கு காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். நடுத்தர குடும்ப மாணவர்கள் பாடங்களைப் படிக்கவோ, கல்வி விழிப்புணர்வு பெறவோ எவ்வித வசதியும் இன்றி வீட்டில் காலத்தை வீணாக்கி வருகின்றனர். இதில் மலைவாழ் மக்களின் நிலை மிக மோசம். 

மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி சார்பில் அரும்புகள் மகிழ் மையம் 2020-2021 என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பில் மலைவாழ் மக்களுக்கு மாற்றுக் கல்வி முறையில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர்கள் குழுக்களாக பிரிந்து மலைவாழ் பழங்குடியின கிராமமான சிறைக்காடு கிராமத்திற்குச் செல்கின்றனர்.

அங்குள்ள கிராம மக்களை சந்தித்து அவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பின்னர் கிராம மக்கள் மற்றும் அங்குள்ள மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. பின்னர் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. மாணவர்கள், கிராம மக்களுக்கு முகக் கவசம் வழங்கப்படுகிறது.

இதனையடுத்து மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கதை கூறுதல், விடுகதை, புதிர் கேள்விகள் கேட்டல் போன்றவை மூலம் கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு மணி நேரம் இதுபோன்று பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் கல்வி கற்பதை மறக்காமல் பள்ளியில் இருப்பது போன்ற சூழலை உண்டாக்குகின்றனர் ஆசிரியர்கள். மேலும் அனைத்து மாணவர்களும் ஓரிடத்தில் கூடுவதால் அவர்களுக்கு உற்சாகமான மனநிலையும் ஏற்படுகிறது. அதே நேரத்தில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு, அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி சுகாதாரமான முறையில் விழிப்புணர்வு கல்வி அளிக்கப்படுகிறது. 

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறியது: 

பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வு போன்றவற்றிற்குத் தயாராகும் வகையில் பாடங்களை மட்டுமின்றி பொது அறிவு போன்றவற்றை வழங்கி வருகிறோம். 

மேலும் அறிவியல், கணித பாடங்களில் அகில இந்திய அளவில் நடைபெறும் திறன் தேர்வுகளில் மாணவர்கள் செல்லிடபேசி மூலம் ஆன்லைன் முறையிலேயே தேர்வு எழுதப் பயிற்சி வழங்கி மாணவர்களும் தேர்வு எழுதி வருகின்றனர். 

பிற ஊர்களுக்கும் மாணவர்கள் சென்று தேர்வு எழுதுவதால் இளம் வயதிலேயே தேர்வு பயமின்றி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாற்றுக் கல்வி முறையில் மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கி மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

சிறைக்காடு மலைகிராமத்தே சேர்ந்த தனலட்சுமி கூறுகையில், பொதுமுடக்கு காரணமாக மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு உணவு உண்பதற்கு கூட தயங்கி வந்தனர். 

தற்போது மாற்றுக் கல்வி முறையால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்கும், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பும் கிடைத்துள்ளது. பெற்றோராகிய எங்களுக்கு சந்தோசமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT