முகப்பு
தமிழ்நாடு

முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்க தமிழக முதல்வர் அனுமதி

நோயின் தீவிரத் தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்க தமிழக முதல்வர் அனுமதி
பகிர்:


நோயின் தீவிரத் தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது, தமிழக அரசு, முதல்வர் பழனிசாமி தலைமையில், கரோனா நோய் தொற்றை தடுக்கவும் சிகிச்சைகள் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கோவிட்-19 நோய் தொற்று, முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தினை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதியினை கோரியிருந்தது. இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த சோதனை முயற்சியை ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில் தொடங்கவுள்ளது.

பிசிஜி தடுப்பு மருந்தினை முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும் மருத்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும் உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும். தமிழக முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.