கோவாவில் இரவில் ஊரடங்கு; வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம்
கோவாவில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று இரவு முதல் இரவு நேரங்களில் முழு ஊரடங்கு
பனாஜி: கோவாவில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று இரவு முதல் இரவு நேரங்களில் முழு ஊரடங்கும், வார இறுதி நாள்களில் பொது முடக்கமும் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
இன்று இரவு முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் அத்தியாவசியச் சேவைகள் தவிர்த்து வேறு வாகனங்கள் இயக்கப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வார இறுதி நாள்களில் அதாவது வியாழக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு பொது முடக்கம் அறிவித்தும், விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் சாவந்த் அறிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அத்தியாவசியக் கடைகள் தவிர்த்து வேறு எந்த விதமான கடைகளோ, நிறுவனங்களோ திறக்கப்படக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
கோவாவில் கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிவிட்டது. உயிர் பலி 18 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.