இலவச வேட்டி - சேலை உற்பத்தி செய்யும் பணியை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும்: ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை
இலவச வேட்டி - சேலை உற்பத்தி செய்யும் பணியை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச வேட்டி - சேலை உற்பத்தி செய்யும் பணியை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கந்தவேல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த படியாக அதிக வேலை வாய்ப்பினை விசைத்தறிக் கூடங்கள் அளித்து வருகின்றன. ஈரோடு பகுதியில் இயங்கி வரும் சுமார் 50 ஆயிரம் தறிகள் மூலம் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். ஈரோட்டில் உள்ள 70 சதவிகிதம் தறிகள் தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளிச் சீருடைகள் உற்பத்தியை மட்டுமே செய்து வருகின்றன. இந்த பணிகள் ஆண்டில் 4 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, வேலை இல்லாத காலங்களில் விசைத்தறி கூடங்கள் இயங்காத நிலை ஏற்படுவதுடன், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படுகிறது.
Advertisement
எனவே, தமிழக அரசு இலவச வேட்டி&சேலை உற்பத்தி மற்றும் இலவச சீருடை உற்பத்தி பணியை ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும். இதுபோல், பள்ளி சீருடைகளுக்கான சட்டை துணிகள் முழுமையாக எங்கள் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.
விசைத்தறி கூடங்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார். தற்போது மத்திய அரசு அமல்படுத்த இருக்கும் புதிய மின்சார திட்டத்தில் விசைத்தறிகளுக்கான விலை இல்லாத மின்சாரம் கிடைக்காது என்ற தகவல்கள் வந்த உள்ளன. மேலும், மின்சாரம் தனியார் மயம் ஆகும் சூழல் ஏற்பட்டு விட்டால், எங்கள் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, விசைத்தறிகளுக்கு தமிழக அரசு வழங்கும் 750 யூனிட் மின்சாரம் தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட வேண்டும். விசைத்தறிக்கான 750 யூனிட் மின்சாரம் தொடர்ந்து இலவசமாக கிடைக்கும் என்பதை தமிழக முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், மின்சார வினியோகத்தை தமிழக அரசே தனது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். விசைத்தறிகளுக்கான மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.