முகப்பு
தமிழ்நாடு

வெறிச்சோடி காணப்படும் ஈரோடு ஜவுளி சந்தை; ரூ. 100 கோடி வர்த்தகம் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை

வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் இன்றி காணப்படும் ஈரோடு ஜவுளி சந்தையில்  ரூ. 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Updated On : 22 ஜூலை, 2020 at 3:22 PM
வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் இன்றி காணப்படும் ஈரோடு ஜவுளி சந்தை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:29 PM

வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் இன்றி காணப்படும் ஈரோடு ஜவுளி சந்தையில்  ரூ. 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

ஈரோடு மாநகர் பகுதியில் நடைபெறும் ஜவுளிக் சந்தையானது (கனி மார்க்கெட்) உலகப் புகழ் பெற்றது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் இந்த சந்தையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாகவும் சில்லறை விலையில் கொள்முதல் செய்வார்கள். இங்கு விற்கப்படும் ஜவுளிகளின் விலை மற்ற இடங்களைக் காட்டிலும் குறைவாகவும், மலிவாகவும் இருப்பதால் இங்கு அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்படும். அந்தந்த கால நிலைக்கேற்ப ஜவுளி விற்பனை செய்யப்படுவது தனி சிறப்பாகும்.

கோடைக் காலங்களில் காட்டன் ஆடைகள், லுங்கி, வேஷ்டி, சேலை, கைக்குட்டை போன்றவை, குளிர்காலத்தில் பெட்ஷீட் போர்வை போன்றவையும் கோவிலின் பண்டிகை காலங்களில் பக்தர்களுக்குத் தேவையான மஞ்சள் நிற சேலை, வேஷ்டி, துண்டு போன்ற ரகங்களும் விற்பனை செய்யப்படும். ஒருநாள் நடைபெறும் இந்த ஜவுளி சந்தையில் சர்வ சாதாரணமாக மூன்று கோடி முதல் ரூ.4 கோடி வரை விற்பனையாகும். பண்டிகை காலங்களில் ரூ. 5 கோடி வரை விற்பனையாகும்.

ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஜவுளி சந்தை வியாபாரிகள் வருகை இல்லை. வெளி மாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் வரத் தடை உள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தை களையிழந்து காணப்படுகிறது. பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் ஜவுளி சந்தையில் மட்டும் ரூ.100 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறும்போது, ஜவுளி சந்தைக்கு வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாபாரிகள் வருகை தருவார்கள். ஆனால், தற்போது வட மாநிலங்கள் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் வரத்து இல்லை.

மேலும், பொதுமக்களிடம் தற்போது பணப்புழக்கம் குறைந்துவிட்டதால் எதிர்பார்த்த வியாபாரமும் நடைபெறுவதில்லை. இனிவரும் காலங்கள் பண்டிகைக் காலங்கள் என்பதால் வியாபாரம் இனியாவது சூடுபிடிக்குமா? அல்லது இதே மந்தநிலை தொடருமா எனத் தெரியவில்லை.

ஏற்கனவே  கரோனா பீதியால் மூன்று மாதம் ஜவுளிக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. பின்னர்  திறக்கப்பட்டன எனினும் எதிர்பார்த்த வியாபாரம் தற்போது வரை நடைபெறவில்லை. இதற்கு முக்கியக் காரணம் பொது போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. பேருந்துப் போக்குவரத்து மீண்டும் இயங்கினால் ஓரளவுக்கு வியாபாரம் நடைபெறும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.