விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பலி: உறவினர்கள் போராட்டம்
வனத்துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வனத்துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட முதியவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக் குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அணைக்கரை முத்து(65). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் காய்கறி பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்ததாக வந்த தகவலையடுத்து கடையம் வனத்துறையினர் நேற்று இரவு விசாரணைக்காக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அணைக்கரை முத்துவிற்கு நெஞ்சுவலி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது மருத்துவர்கள் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
உறவினர்கள், வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பரிந்துரைத்ததையடுத்து குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டார். மேலும் நேற்று பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி மாவட்டச் செயலர் வெங்கடேஷ் அணைக்கரை முத்து வீட்டிற்கு வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மறு பிரேதப் பரிசோதனைக்கு உயர்நீதிமன்றத்தில் மனு வழங்கப் போவதாகவும், நிவாரணத் தொகையாக 50 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, வனத்துறையினர் மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி காவல்துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வனத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.