கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்: திமுக தீர்மானம்
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை -2020, பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை -2020, பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐத் திரும்பப் பெற வேண்டும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம்: 1
கலைஞர் கருணாநிதியின் இரண்டாவது நினைவு தினமான 7.8.2020 அன்று, நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றிட இரவு பகல் பாராது கண் துஞ்சாது தங்களின் குடும்ப சுகதுக்கங்களை எல்லாம் துறந்து மறந்து, தியாக உணர்வுடன் பணியாற்றிய - பணியாற்றிவரும் “கரோனா போராளிகள்” என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வதென்றும்; வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதென்றும்; கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 2
மத்திய அரசு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், இந்திய மருத்துவக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி - அதில் தமிழ்நாட்டிலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு வழங்க அளித்துள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்றுவது குறித்த வரைமுறைகள் வகுக்க வேண்டும் என்று தெளிவுபட தீர்ப்பளித்துள்ளதையும், “மத்திய அரசையோ, இந்திய மருத்துவக் கழக்தையோ, ஏதோ தேர்தல் அறிக்கையில் சொன்னது குறித்து முடிவு எடுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. மத்திய அரசு இந்த நீதிமன்றம் முன்பும், ஏற்கனவே உச்சநீதிமன்றம் முன்பும் பிரமாண வாக்குமூலத்தில் உறுதியாக ஒப்புக்கொண்ட இடஒதுக்கீடு பற்றித்தான் முடிவு எடுக்கச் சொல்கிறோம்” - என்று பொருள் பொதிந்த - பொன்னான வரிகளை மத்திய பா.ஜ.க. அரசு மனதில் நிறுத்தி - உடனடியாகக் கூட்டத்தைக் கூட்டி மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி, முதுநிலை மருத்துவக் கல்வி ஆகியவற்றில் இந்தக் கல்வியாண்டே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினையும், பட்டியலின மாணவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் எனவும், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரை அழைத்துப் பேச வேண்டும் என்று உயர்நீதிமன்றமே கூறியிருப்பதால் - மத்திய அரசின் அழைப்பிற்காகக் காத்திராமல் - தனது கூட்டணிக் கட்சியாக இருக்கும் பா.ஜ.க.,வின் பிரதமருக்கு உடனடியாக முதல்வர் அழுத்தம் கொடுத்து இந்தக் கல்வியாண்டிலேயே இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 3
தற்போது, “புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை -2020”-ஐ வெளியிட்டு - அதன்மீது “கருத்துக் கேட்பு” என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்த முனைந்திருப்பதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மாநில உரிமைகளுக்கு விரோதமான - ஜனநாயக விரோத சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நாடாளுமன்றம் கூடிய பிறகு - உரிய விவாதம் நடத்தி - துறை சார்ந்த நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் ஆராய்ந்து - ஏற்கனவே உள்ள “சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006”-ஐ மேலும் வலுப்படுத்தும் வகையிலும் - நாட்டில் உள்ள இயற்கை வளங்களுடன் இணைத்து மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் பாதுகாத்திடும் வகையிலும் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 4
“மழலைக் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும்” என்கிற இந்த தேசியக் கல்விக் கொள்கை; திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது.
ஆகவே நாடாளுமன்றம் கூடி - கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை - அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள “புதிய தேசியக் கொள்கை-2020”-ஐ நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மத்திய அமைச்சரவையால் 29.7.2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள- “புதிய கல்விக் கொள்கை-2020”-ன் இறுதி வடிவத்தை உடனடியாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும்; “தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை” என்றும்; “சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைப் பட்சமானதாக அமைந்துள்ள இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்றும்; அ.தி.மு.க. அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.