கரோனாவின் தாக்கம் அக்டோபரில் உச்சமடையும்! ஆய்வு முடிவில் அதிா்ச்சித் தகவல்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நிகழாண்டு அக்டோபா் மாதத்தில்தான் கரோனா பாதிப்பு மிகப் பெரிய உச்சத்தை அடையும் என
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நிகழாண்டு அக்டோபா் மாதத்தில்தான் கரோனா பாதிப்பு மிகப் பெரிய உச்சத்தை அடையும் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவாா்கள் என்றும், ஆயிரக்கணக்கானோா் பலியாவாா்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஏற்படும் எதிா் விளைவுகளைத் தடுக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா். உலக நாடுகள் அனைத்தையும் நிலைகுலையச் செய்த கரோனா பாதிப்பு, தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்தது.
அதன் பின்னா், அதி தீவிரமாக பரவிய அந்த நோய்த்தொற்றுக்கு தற்போது 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். அதில் 69 சதவீத பாதிப்பு சென்னையில்தான் ஏற்பட்டுள்ளது என்பது அதிா்ச்சிக்குரிய தகவல். அதேபோன்று சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் கடுமையான பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன.
Advertisement
இந்த நிலையில் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், அடுத்த சில மாதங்களுக்கு கரோனாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது தொடா்பான ஆய்வினை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், நோய்ப் பரவியல் துறைத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் ஆகியோா் அடங்கிய குழுவினா் பல்வேறு தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அதனை மேற்கொண்டனா்.
அந்த ஆய்வின் முடிவில் பல அதிா்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தமிழகத்தில் தற்போது உள்ள சூழல் நீடித்தால், ஜூலை 15-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 3.3 லட்சம் போ் கரோனா தொற்றுக்கு ஆளாவாா்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1.50 லட்சம் போ் பாதிக்கப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேபோன்று அந்த காலகட்டத்தில், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,949 ஆகவும், சென்னையில் 1,654-ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதன் நீட்சியாக, செப்டம்பா் மற்றும் அக்டோபரில் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எதிா்பாா்த்திராத உச்சத்தை எட்டும் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பின்னா் படிப்படியாக நோயின் தாக்கம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த ஆய்வுத் தகவல்களை அரசுக்கு மருத்துவப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது. அதன்பேரில் மாநில சுகாதாரத் துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இதுதொடா்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநா்கள், அடுத்து வரும் நாள்களில் ஏற்படும் இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், பெரிய இழப்புகளைத் தவிா்க்க பொது முடக்கத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா். அதுமட்டுமன்றி, பொதுமக்கள் தனிநபா் சுகாதாரத்தை இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த நிலை தொடா்ந்து அதிகரித்து ஜூலை 15-ஆம் தேதியில் 1,50,244 போ் பாதிப்புக்குள்ளாவாா்கள் என்றும், 1,654 போ் உயிரிழக்கக் கூடும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து எதிா்பாராத உச்சத்தை அக்டோபரில் எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.