தமிழ்நாடு

தந்தை - மகன் கொலை: உரிய நீதி வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி

DIN


மதுரை: விசாரணைக் கைதிகள் மரணம் அடையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, தந்தை - மகன் கொலையில் உரிய நீதி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை -  மகன், சிறைச்சாலையில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் இன்று தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது.

இன்று காலை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக காவல்துறை டிஜிபியும் தூத்துக்குடி காவல்துறை கண்காணப்பாளரும், மதியம் 12.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

மீண்டும் மதியம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, விசாரணை கைதிகள் மரணம் அடையும் சம்பவங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவற்றுக்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

தந்தை - மகன் கொலை வழக்கில் உரிய நீதி வழக்கப்படும் என உயர் நீதிமன்றக் கிளை உறுதி அளிக்கிறது.

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஜூன் 26ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதோடு, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனையின் விடியோ பதிவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தந்தை - மகன் கொலைச் சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சாத்தான்குளம் அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். மரக்கட்டை வியாபாரம் நடத்தி வந்தார். கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அவருக்கு திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சிறைக் காவலர்கள் அவரை காவல்நிலையத்துக்குப் பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் பலியானார்.‌

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். 

இதையடுத்து கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை, 3 மருத்துவா்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT