சசிகலா பிநாமி எனக்கூறி சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக அனைத்து ஆவணங்களுடன் வருமான வரித்துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே.தினகரன் தாக்கல் செய்த மனுவில், கங்கா பவுண்டேசன்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனம், சென்னை பெரம்பூரில், ஸ்பெக்ட்ரம் மால் என்ற வணிக வளாக கட்டடத்தைக் கட்டியது. இந்த வணிக வளாக உரிமையாளர்களிடம் இருந்து ஒரு கடையையும், 11 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் வாங்கினேன்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலாவின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக எனது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் உள்ள சொத்துக்களை 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களைப் பெற்றதாகவும் வருமான வரித் துறை தரப்பில் என் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், என்னை சசிகலாவின் பிநாமி எனக் கூறி, ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் உள்ள எனக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஸ்பெக்ட்ரம் வணிக வளாக உரிமையாளரிடம் இருந்து வாங்கிய எனது சொத்தை வங்கியில் அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ளேன். எனக்கு சசிகலாவின் பரிவர்த்தனைகள் பற்றி எதுவும் தெரியாது. எனவே எனது சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக அனைத்து ஆவணங்களுடன் வருமான வரித்துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.