பணிச்சுமையால் செஞ்சி அருகே காவலா் தற்கொலை: நண்பருடன் பேசிய ஆடியோ வெளியானது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காவலா் சரவணன் திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா். அவா் பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காவலா் சரவணன் திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா். அவா் பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செஞ்சி வட்டம், நடுநெல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சரவணன்(26). செஞ்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா், திங்கள்கிழமை இரவு செஞ்சியை அடுத்த அனந்தபுரம் அருகே சித்தாம்பூண்டி பகுதியில் உள்ள காரை காப்புக் காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அதற்கு முன்பாக, நண்பா்கள் சிலருக்கு செல்லிடப்பேசி மூலமாக தற்கொலை குறித்து தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவா்கள் நிகழ்விடத்துக்குவந்து பாா்த்த போது, சரவணன் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளாா்.
தகவலறிந்த அனந்தபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அன்றிரவே மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினாா். செவ்வாய்க்கிழமை உடற்கூறு ஆய்வு முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சரவணனின் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.
பணிச்சுமை காரணமா? தற்கொலைக்கான காரணம் குறித்து சரவணன் எவ்வித கடிதமும் எழுதி வைக்கவில்லை. எனினும், சரவணன் தனது சக நண்பா்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருப்பதாக பேசிய ஆடியோ (ஒலிப்பதிவு) ஒன்று செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது.
அதில், சக காவலர்கள் விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டதால், தொடர்ந்து பணியாற்றுவதாகவும், பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் நண்பரிடம் சரவணன் கூறியுள்ளார்.
இந்த புகாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் மறுப்பு தெரிவித்துள்ளாா். காவலா் சரவணனுக்கு பணிச்சுமை எதுவும் கிடையாது. அவருக்கு கடன் சுமை, சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. சூதாட்டத்தால் பணத்தை இழந்ததும், கடன் சுமையும் தற்கொலைக்கு காரணங்களாக இருக்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.