தமிழ்நாடு

குளிர்சாதனப் பேருந்துகளில் போர்வைகள் வழங்கத் தடை

DIN


அரசு மற்றும் தனியார் குளிர்சாதனப் பேருந்துகளில் திரைச்சீலைகள் அகற்றப்பட வேண்டும், போர்வைகள் வழங்கப்படுவது நிறுத்திவைக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:

"தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 21,092 பேருந்துகளும் கடந்த 9-ஆம் தேதி முதல் முறையாக கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தபின்னரே தடங்களில் இயக்கப்படுகின்றன. பணிமனைகளில் உள்ள கழிவறைகள், தொழிலாளர்கள் ஓய்வறைகள் கிருமிநாசினி மூலம் முறையாக சுத்தம் செய்யப்படுகின்றன. 

மேலும், 7,590 தனியார் பேருந்துகள், 4,056 மினி பேருந்துகள் மற்றும் 879 ஆம்னிப் பேருந்துகள் அனைத்தும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் திரைச்சீலைகள் அகற்றப்பட்டு, குளிர்சாதனத்தின் அளவு குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் நலன் கருதி நாளது வரையில் வழங்கப்பட்டு வந்த போர்வைகளானது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன்/ஆட்டோ வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை நாள்தோறும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து பராமரிக்கமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களையும் முறையாக சுத்தம் செய்து இயக்குமாறும், இப்பணிகளை அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் வாயிலாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக எல்லைக்குட்பட்ட 21 போக்குவரத்து சோதனை சாவடிகளிலும், வெளி மாநிலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் முறையாக கண்காணித்து, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களையும் சுத்தமாகவும், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உரிய முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.   

இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், போக்குவரத்து ஆணையர் தென்காசி சு. ஜவகர், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்து இணை ஆணையர்கள், ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் தலைவர் அப்சல், பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தர்மராஜ், கோவை டிராவல்ஸ் சங்கத்தின் தலைவர் திருமூர்த்தி, தனியார் நிறுவன வாகனங்கள் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் செந்தில், மதுரை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT