தமிழ்நாடு

3,501 நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

DIN

தமிழகத்தில் 3 ஆயிரத்து 501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:-

மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 3 ஆயிரத்து 501 நகரும் நியாயவிலைக் கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பில் தொடங்கப்படும். மாநிலத்தில் உள்ள 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 6 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், ஒரு நகரக் கூட்டுறவு வங்கி, ஒரு நகர கூட்டுறவுக் கடன் சங்கம், ஒரு தொடக்கக் கூட்டுறவு பண்டக சாலை உள்பட மொத்தம் 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு ரூ.27.74 கோடியில் சொந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும். மேலும், 95 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.14.75 கோடியில் நவீனமயமாக்கப்படும். புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக் கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும் ரூ.17.87கோடியில் கட்டப்படும்.

அம்மா சிறப்பங்காடிகள்: காஞ்சிபுரம் மாவட்டம் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமாக சென்னை தண்டையாா்பேட்டையிலும், காஞ்சிபுரம் நகரத்திலும் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் புதிதாக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்படும். மேலும், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பை பெரியளவில் பெற்றுள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் 189 அங்காடிகள் கூடுதலாக தொடங்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: நெல் உலா்களன், நவீன நெல் சேமிப்பு கொள்கலன்கள் ஆகியன நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ளன. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ரூ.70 கோடியில் கட்டப்படும். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பயன்படுத்த இயலாத அளவுக்கு சேதம் அடைந்த கிடங்குகள் உள்ளன. அவற்றை முற்றிலுமாக அகற்றி, சென்னை ஐ.ஐ.டி.யின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூா் ஆகிய மாவட்டங்கள் வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்களை பதப்படுத்தி சேமித்து வைத்திடும் வகையில், 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் ரூ.225 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT