முகப்பு
தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவர்களை அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு

பெரம்பலூர் அருகே சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவர்களை அரசுப் பள்ளியில் தங்க வைத்து தனிமைப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

பெரம்பலூர் அருகே சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவர்களை அரசுப் பள்ளியில் தங்க வைத்து தனிமைப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனங்கள் மூலமாக, அவரவர் கிராமத்துக்கு அண்மையில் வந்தடைந்தனர். இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், இம் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்துக்கு சென்னையிலிருந்து வந்த நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை, அங்குள்ள அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான முயற்சியில் சுகாதாரத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனர்.

 இதையறிந்த, அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டால், அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், மாற்று இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கிராம மக்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதாகக்கூறி, பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத் தகவலறிந்த வேப்பந்தட்டை வட்டாட்சியர் கவிதா, மங்கலமேடு துணை கண்காணிப்பாளர் தேவராஜன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று பொதுமக்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 20-க்கும் மேற்பட்டோர் மீது வி.களத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.