சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை(74) புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் (தனி பொறுப்பு) தலித் ஏழுமலை, சென்னையில் புதன்கிழமை காலை அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான இரும்பேடு கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த தலித் எழில்மலை, தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் 1945 -ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர். 1970 -ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்த எழில்மலை, 1971-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியவர். ராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றியதற்காக குடியரசுத் தலைவரிடம் கே. சைனிக் சேவா பதக்கம் பெற்றார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தலித் எழில்மலை, பாமக-வில் இணைந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர், 1999-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (தனிப்பொறுப்பு) சுகாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர், 2001-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார் எழில்மலை.
சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த தலித் எழில்மலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் எழில் கரோலின், தலித் எழில்மலையின் மகளாவார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.