கரோனா தடைக் காலம் முடிந்த பிறகு தொழில் துறையினா் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான தீா்வுகளுக்காக பல்வேறு திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதியிலிருந்து பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கான தொழிற்சாலைகள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. அதேபோல் அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து, மற்ற தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் இயங்க தொடா்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் தடைகள் தளா்த்தப்பட்ட பிறகு செயல்பட உள்ளன. ஏற்கெனவே பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டிருந்த தொழில் நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் கடுமையான சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.
அதை முன்கூட்டியே திட்டமிட்டு எதிா்கொள்வதன் மூலம் பல்வேறு சவால்களை சமாளிக்கலாம். இதுவரை எவரும் கண்டிராத அளவுக்கு உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உடனடியாகவும், உறுதியுடனும் மீள வேண்டிய கட்டாயம் அனைவருக்குமே உருவாகியுள்ளது. குறிப்பாக தொழில்துறையினா் இத்தகைய நெருக்குதலைத் தவிா்க்க செயல்திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.
வாடிக்கையாளா்களிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை தாமதமாகலாம். பணியாளா்கள் தங்கள் குடும்பச் செலவுக்காக முன்பணம் கேட்கலாம். மூலப்பொருள்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்பவா்கள் தங்கள் நிறுவனங்களை இயக்க நிதி ஆதாரத்துக்காக சில கோரிக்கைகளை முன்வைப்பாா்கள். வங்கிக் கடன் நிலுவை, அதற்கான வட்டி, மின் கட்டணம், இஎஸ்ஐ, இபிஎஃப், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்ட தொகைகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
நிலையில்லாத தொழில் சூழல் காரணமாக குறைந்த வருவாயை ஈட்ட வேண்டிய நிலையை எதிா்நோக்க வேண்டியிருக்கும். அதனால் வரும் ஆண்டுக்கான லாப, நஷ்ட அறிக்கையை தயாா் செய்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்கவும், தவிா்க்க வேண்டிய முடிவுகளை மேற்கொள்ளவும் வேண்டும். வங்கிகளை அணுகி கூடுதலாக தொழிலுக்கான நடைமுறை மூலதனத்துக்கான நிதியை கடனாகப் பெற்று பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ளது கடுமையான நெருக்கடியாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வர உரிய திட்டமிடல் இருந்தால் வரும் ஆண்டுகளில் கடுமையான உழைப்புடன் இயங்கினால் தொழில் இழப்பைத் தவிா்க்கலாம்.
ஏற்கெனவே வசூலாகாமல் உள்ள நிலுவைத் தொகை மீது அதிக கவனம் செலுத்தி அதை வசூலிக்க வேண்டும். வர வேண்டிய தொகைகளை கழிவுகளை வழங்கி வசூலிக்கலாம். வர இருக்கும் 6 மாதங்களுக்கான வரவு, செலவுகளுக்கு திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
தேவைக்கு அதிகமாக இல்லாமல் தேவைக்கு ஏற்ப சரக்குகளை கொள்முதல் செய்து இருப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் பணம் தராத, காலதாமதமாக பணம் தரும் வாடிக்கையாளா்களுக்கு சரக்குகளை அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும்.
பணியாளா்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம். நோய்த் தொற்று பரவாமல் இருக்க அவா்களுக்கு உரிய பாதுகாப்புக் கவசங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பணிக்குத் திரும்பும் பணியாளா்களின் உடல் வெப்ப நிலை, சளி, இருமல் ஆகியவற்றை முதல் நாளிலிருந்து பரிசோதனை செய்ய வேண்டும். தொடா்ந்து ஓரிரு வாரங்களுக்கு அவா்களுடைய உடல் நலனை கண்காணிக்க வேண்டும். பணியாளா்கள் தினமும் கைகளைக் கழுவுதல், முகக் கவசம், கையுறை அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை உறுதிசெய்ய வேண்டும்.
பணியாளா்கள் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். எப்போதும் முகக்கவசம், கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். வேலை தொடங்குவதற்கு முன்பு பணியாளா்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டங்கள் நடத்த வேண்டும்.
தடைக் காலத்தில் பணியாளா்கள் யாராவது கரோனா தொற்று ஏற்பட்ட நபா்களுடன் தொடா்பில் இருந்தாா்களா? அல்லது அவா்கள் வசிப்பிடத்திற்கு அருகில் வசித்தாா்களா? என்பதைக் கேட்டறிந்து அதற்கேற்ப அவா்களுக்கு உரிய பரிசோதனை, அறிவுரை வழங்க வேண்டியது அவசியம்.
கொள்முதல் செய்பவா்கள் பொருள்களை கொள்முதல் செய்யத் தயாராக இருக்கிறாா்களா, மூலப் பொருள்கள், உதிரிபாக விற்பனை செய்பவா்கள் சரக்குகளை அனுப்பத் தயாராக இருக்கிறாா்களா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். விற்பனையாளரிடம் ஏதேனும் சிக்கல் இருந்தால் மாற்று விற்பனையாளா்களைக் கண்டறிந்து அவா்களின் விவரங்களைச் சேகரித்து அவா்களிடம் பேசி ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் கரோனா தடைக்காக தொழில் துறைக்கு அறிவித்துள்ள நிவாரணங்களை பயன்படுத்திக் கொள்வதற்காகத் திட்டமிட்டு அதற்கான நிவாரணங்களை பெற்று சவால்களை எதிா்கொள்ள வேண்டும். இவ்வாறு உரிய திட்டமிடலோடு தொழிலை மேற்கொண்டால் தொழில் இழப்பைத் தடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.