48 நாள்களுக்கு பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்!
கரோனா தொற்று பரவல் தொடர்பான பொது முடக்கத்தால் வீட்டிற்குள் அடைபட்டிருந்த மக்கள் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் திங்கள்கிழமை முதல் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
கரோனா தொற்று பரவல் தொடர்பான பொது முடக்கத்தால் வீட்டிற்குள் அடைபட்டிருந்த மக்கள் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் திங்கள்கிழமை முதல் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இன்னும் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மே 17-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருப்பதாலும், நாமக்கல் மாவட்டம் சிகப்பு மண்டல பட்டியலில் உள்ளதாலும் மக்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே வராமல் இருந்தனர்.
கடந்த 4-ஆம் தேதி வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்படலாம் என அரசு உத்தரவிட்டதால் ஓரளவு நிம்மதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து தினசரி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில், மக்கள் நடந்தும், வாகனங்களிலும் வெளியே வருவதை வாடிக்கையாக்கினர். திங்கள்கிழமை(மே 11) முதல் 34 வகையான கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் சலூன், அழகு நிலையங்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. 48 நாள்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், அவ்வாறு வந்தாலும் காவல்துறையின் கெடுபிடிகள், கரோனா அச்சம் போன்ற நெருக்கடிக்கு மக்கள் ஆளாகி வந்தனர்.
அதுமட்டுமின்றி, கோடை வெயில் கொளுத்தும் நிலையில் உடல் புழுக்கத்திலும், நல்ல காற்றை சுவாசிக்க முடியாமல், விரும்பியதை வாங்கி சாப்பிட முடியாமல் மனப்புழுக்கத்திலும் பலர் தவித்து வந்தனர். தற்போது பொது முடக்கம் ஒரு மண்டலத்தை கடந்துவிட்ட நிலையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் ஆண்களும், பெண்களும் சுதந்திர பறவைகளாக வாகனங்களில் பறந்து சென்ற வண்ணம் இருந்தனர்.
மேலும், அரசுத் துறை, தனியார் நிறுவன ஊழியர்கள், சிறு, குறு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரக் கடைகளில் பணியாற்றி வந்தவர்களும் மீண்டும் வேலைக்கு செல்கிறோம் என்ற ஆர்வமுடன் வெளியே வந்தனர். மக்களிடையே கரோனா அச்சம் மறைந்து போனது இதன்மூலம் தெரியவந்தது. மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் வியாபாரக் கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.