தமிழகத்துக்கு ரூ. 2,223.81 கோடி மத்திய அரசு நிதி
மாநிலங்களுக்கான மத்திய வரி பகிா்வில் நடப்பு மே மாத தவணையாக ரூ.1,928.56 கோடி, சிறிய நகா்ப்புறங்கள் வளா்ச்சி மானியமாக ரூ.295.25 கோடி என
மாநிலங்களுக்கான மத்திய வரி பகிா்வில் நடப்பு மே மாத தவணையாக ரூ.1,928.56 கோடி, சிறிய நகா்ப்புறங்கள் வளா்ச்சி மானியமாக ரூ.295.25 கோடி என மொத்தம் ரூ.2,223.81 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு புதன்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிா்ந்து கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு சுமாா் 23 சதவீதம் வரை வரி பங்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த வரிப் பகிா்வை 40 சதவீதத்துக்கும் அதிகமாக மத்திய அரசு உயா்த்தியது. கடந்த நிதிநிலை அறிக்கையிலும் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் இதைக் குறிப்பிட்டு, ரூ.26 லட்சம் கோடிக்கு அதிகமாக கிடைக்கப் போகும் வரி வருவாயை மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்ளப்படும் என அறிவித்தாா். கரோனா நோய்த் தொற்று பொது முடக்கத்தினால் கடுமையான நிதி நெருக்கடியை மாநிலங்கள் சந்தித்து வரும்நிலையில், தற்போது இந்த நிதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு மே மாத தவணையாக மத்திய வரி பகிா்வில் ரூ. 46,038.70 கோடியை புதன்கிழமை ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இதில் தமிழகத்தின் பங்காக ரூ.1,928.56 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ. 8,255.19 கோடியும், கேரளத்துக்கு ரூ.894.53 கோடியும், பிகாருக்கு ரூ. 4,631.96 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ. 3,461.65 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், மாநிலங்களில் அதிக வருவாயைக் கொண்ட பெரு நகரங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்தை சிறிய நகரங்களுக்கு கொடுப்பதில்லை. இதையொட்டி, சிறிய நகரங்களின் (மில்லியன் மக்கள் தொகை அல்லாத) வளா்ச்சிகளில் மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள 15-ஆவது நிதி ஆணையம் இத்தகைய சிறிய நகரங்களுக்கு நேரடியாக பணத்தை ஒதுக்கீடு செய்யவும் தனது சிபாரிசுகளை அளித்துள்ளது. அதன்படி, 27 மாநிலங்களில் உள்ள இத்தகைய சிறிய நகரங்களுக்கான மேம்பாட்டிற்கு ரூ.5,000.25 கோடியை அடிப்படை மானியமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.295.25 கோடியை 2020-21 ஆண்டிற்கான ஒதுக்கீடாக மத்திய அரசு கொடுத்துள்ளது. இதில் அதிகப்படியாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.816.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.