பிசான சாகுபடிக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து பிசான சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தண்ணீர் திறந்து விட்டார்.
அம்பாசமுத்திரம்: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து பிசான சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தண்ணீர் திறந்து விட்டார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை விடுத்ததையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து நவ. 1 முதல் மார்ச் 31 வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காரையாறு அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.முருகையாபாண்டியன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறியது: பிசான பருவத்திற்காக முதல்வர் உத்தரவின்படி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்குக் கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய்கள் மூலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால், தெற்கு மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவிப் பொறியாளர்கள் மகேஸ்வரன், ஆதிமூலம், மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் பிச்சையா, அழகுராணி, சீனிவாசன், உதவி பொறியாளர் முத்துக் குமார், திருநெல்வேலி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி, அதிமுக ஒன்றிய செயலர் விஜயபாலாஜி, துணைச் செயலர் ப்ராங்க்ளின், இளைஞரணி செயலர்கள் துர்கை பாபு, அருண், நகரச் செயலர்கள் பழனிக்குமார், அறிவழகன், கண்ணன், ராமையா, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாரிமுத்து, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்தின் கீழ் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு பிசான சாகுபடிக்காக நவ.1 முதல் மார்ச் 31 வரை 151 நாள்களுக்கு ஒரு நாளைக்கு 417.17 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்குப் பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்குள்பட்ட 2756.62 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும்.