முகப்பு
தமிழ்நாடு

பாதுகாப்பு வேண்டுமா? எனக் கேட்டு காவல் ஆணையரிடமிருந்து கடிதம்: தீபக் தகவல்

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா என சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என தீபா, தீபக்கை உயர்நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து, நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா என சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக தீபக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை  அதிமுக நிர்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் தாக்கல் செய்திருந்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. ஹைதராபாத் திரட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்துக்களை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாரிசு உரிமை கோரிய தீபா,தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகளான தீபா, மற்றும் மகன் தீபக் தான் இரண்டாம் நிலை வாரிசுகள் என இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் இருவரும் இந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதைப் போன்று ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றைக் கொண்டு அவரது பெயரில் அறக்கட்டளைத் தொடங்கி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

மேலும் தீபா, தீபக் ஆகியோருக்கு  24 மணி நேரமும் அவர்களது சொந்த செலவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தனக்கும், தனது அக்கா தீபாவுக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா என கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.  அப்போது அரசு தரப்பிலும் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையை வரும் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.