மறையாத மனிதநேயம்: பைக் மோதி கால்கள் உடைந்த சினை நாயை சென்னை புளூகிராஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த மக்கள்
வந்தவாசி அருகே பைக் மோதியதால் பின்னங்கால்கள் உடைந்து தவித்து வந்த கருவுற்ற நாயை சிகிச்சைக்காக மினிசரக்கு வாகனத்தில் சென்னை புளூகிராஸ் கால்நடை மருத்துவமனைக்கு பொதுமக்கள் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மோதியதால் பின்னங்கால்கள் உடைந்து தவித்து வந்த கருவுற்ற நாயை சிகிச்சைக்காக மினிசரக்கு வாகனத்தில் சென்னை புளூகிராஸ் கால்நடை மருத்துவமனைக்கு பொதுமக்கள் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், சென்னாவரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கருவுற்ற நாய் மீது பைக் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அந்த நாய்க்கு பின்னங்கால்கள் இரண்டும் உடைந்து காயமடைந்ததால் நகர முடியாமல் தவித்தது.
இதைக் கண்ட அந்தப் பகுதி சமூக ஆர்வலர் எஸ்.சுரேஷ் இதுகுறித்து கால்நடை மருத்துவர் மதனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த மருத்துவர் மதன் அந்த நாய்க்கு சிகிச்சை அளித்தார்.
இதைத்தொடர்ந்து எஸ்.சுரேஷ், அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாயை அருகில் உள்ள முள்புதரில் வைத்து தொடர்ந்து பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த நாய்க்கு உடல் உபாதை அதிகரித்ததாலும், அது நிறைமாத கர்ப்பமாக இருந்ததாலும், புளூகிராஸ் அமைப்பில் அந்த நாயை ஒப்படைக்க முடிவு செய்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள அரிமா சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சரவணன் மூலம் சென்னை வேளச்சேரியில் உள்ள புளூகிராஸ் கால்நடை மருத்துவமனையை தொடர்பு கொண்டனர்.
இதற்கு அந்த மருத்துவமனை ஒப்புதல் அளித்ததின்பேரில், பொதுமக்கள் திங்கள்கிழமை அந்த நாயை குளிப்பாட்டி மினிசரக்கு வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி சென்னை புளூகிராஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுவாக சாலையில் யாரேனும் விபத்தில் காயமடைந்து கிடந்தாலே 108 ஆம்புலன்ஸ் அவர்களை பார்த்துக் கொள்ளும் என்று எளிதாக அந்த இடத்தை கடந்துவிடும் மனிதர்களின் மத்தியில், கருவுற்ற நாயைக் காப்பாற்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட இந்த மனிதநேய செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.