வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறவுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுவேல் யாத்திரைக்கு அனுமதியில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறவுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் இரண்டு மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் பாலமுருகன், சமூக ஆர்வலர் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள மனுக்களில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள பொதுமுடக்கம் நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வெள்ளிக்கிழமை (நவ.6) திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை முருக கடவுளின் அறுபடை வீடுகளான கோயில்களுக்குச் சென்று இறுதியாக வரும் டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிறைவடைகிறது என யாத்திரை குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி, மொஹரம் உள்ளிட்ட மத ரீதியான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு மாத காலத்துக்கு மேல் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை கூட இருப்பதால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்த சில கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. அதே போன்று சட்டம் ஒழுங்கு பிரச்னை இந்த வேல் யாத்திரையின் போது ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வேல் யாத்திரை நிறைவடையும் நாளான டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் அதன் காரணமாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி காவல்துறை டிஜிபி-க்கு பாஜக பொது செயலாளர் மனு அளித்தார். அதற்கு சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிபாளர்களை அணுக டிஜிபி பதிலளித்துள்ளார்.
மேலும், சூழ்நிலையைப் பொருத்து முடிவெடுக்க காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியிருந்தார். வேல் யாத்திரை தொடங்கும் திருவள்ளூரில் பாஜக அளித்த மனுவில் கூட்டம் நடத்துவது போன்று மனு அளிக்கபட்டுள்ளது. அதில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
பொதுமுடக்கத்துக்கு முன் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பேராட்டம் அல்லது பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ள உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கரோனா பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க அவ்வப்போது அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அதன்படி அண்மையில் பிறப்பித்த உத்தரவில் வரும் நவம்பர் 16-ஆம் தேதி வரை அதிகப்பட்சமாக 100 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக
உலகின் பல்வேறு நாடுகளில் இரண்டு மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜகவுக்கு தெரிவிக்கப்படும் என வாதிட்டார்.
அப்போது பாஜக தரப்பில், தமிழக அரசு குறிப்பிட்டு எந்தப் பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை. மத்திய அரசு, தனி மனித விலகலை பின்பற்றவே அறிவுறுத்தியுள்ளது.கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் யாத்திரையின் போது எந்தவொரு பகுதியிலும் தங்கப் போவதில்லை. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் யாத்திரைக்கு தடை விதிப்பது சரியானது அல்ல. இதற்காக அரசு விதித்துள்ள எந்த விதிகளையும், நிபந்தனைகளையும் மீறப் போவதில்லை. யாத்திரையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும், யாரும் உடன் செல்லப் போவதில்லை. எனவே அரசு முடிவெடுக்கும் முன் தொடரப்பட்ட இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்க முடியாது. வரும் நவம்பர் 15-ஆம் தேதி வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு, அதை தடை செய்யக் கோரிய மனுக்கள் மீது அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி, வேல் யாத்திரைக்கு தடை கோரிய இரு வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.