முகப்பு
தமிழ்நாடு

சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்
பகிர்:

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கரோனா பாதித்த காவல் துறையினருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உதவிய காவல் அதிகாரிகள்

கரோனா தொற்று காலத்தில், முன்கள பணியாளர்களோடு மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் தீவிர முயற்சி காரணமாக சென்னை கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி என்ற உறைவிடத்தை தமிழக சுகாதாரத் துறையின் ஒப்புதலுடன் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட காவல் ஆளிநர்களுக்கான நோய் சிகிச்சை மற்றும் நல மையமாக மாற்றியமைக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் உதவியுடன் தனி கவனம் செலுத்தி காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  அதில் 3,117 காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்பேரில், மேற்படி கரோனா சிகிச்சை மையத்தை அவ்வப்போது கண்காணித்து, அவற்றிற்கு தேவையான உதவிகளை வழங்கி காவல் ஆளிநர்களின் நலன் காத்திட சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ஆர்.சுதாகர், கோட்டூர்புரம் சரக உதவி ஆணையாளர் கே.என்.சுதர்சன் சிறப்பாக பணிபுரிந்தனர்.

2. எம்.கே.பி நகரில் 24 மணி நேரத்தில் திருட்டுக் குற்றவாளி கைது

சென்னை, எம்.கே.பி நகர், மத்திய நிழற்சாலை சாலை, அப்துல்கலாம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜோசப் செல்வராஜ் பாரிமுனையில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 04.11.2020 அன்று மேற்படி வீட்டை பூட்டிவிட்டு, அவரது கடைக்கு சென்று பின்னர் மாலை வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

எம்.கே.பி.நகர் சரக உதவி ஆணையாளர் ஹரிகுமார் தலைமையில், பி-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் எம்.சி. ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் பிரேம் குமார், கல்வியரசன், தலைமைக் காவலர் உதயராஜ், முதல்நிலைக் காவலர்கள் சு.கார்த்திக் மற்றும் வினோத் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குற்றவாளி முகத்தில் கைக்குட்டை அணிந்து மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், பின்னர் சற்று தொலைவில் நிறுத்தியிருந்த காரில் ஏறி திருட்டு நகைகளுடன் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

அதன்பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி தங்க நகைகளை திருடிய குற்றவாளி ஜான்சன் நெல்சனை 05.11.2020 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரர் வீட்டில் திருடிய 35 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

3. சமிக்ஞைகளுடன் போக்குவரத்து சீர் செய்யும் பெரியமேடு போக்குவரத்து காவலர் ராஜேஷ்

சென்னை பெருநகர காவல், ஜி-2 பெரியமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் ராஜேஷ் போக்குவரத்து சிக்னல் பணியின்போது, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் வேகமாகவும், சிறப்பான சமிக்ஞைகளுடனும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இவர் பணியின்போது, சாலையை கடக்க முற்படும் வயதான நபர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கண்டால் உடனே சென்று அவர்களின் கரத்தை பிடித்து சாலையை கடக்க உதவி புரிவார்.

மேலும், இவரது சிறப்பான சமிக்ஞைகளுடன் கூடிய போக்குவரத்து சீர் செய்யும் பணியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பொதுமக்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, சென்னை ஸ்டைல் டிராபிக் போலீஸ் ராஜேஷ் என சமூக வலைதளங்களில் அழைக்கப்படுகிறார்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் இன்று (07.11.2020) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →