முகப்பு
தமிழ்நாடு

தேசியக் கொடி அவமதிப்பு: எல். முருகன் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து விசாரணை - காவல்துறை

தேசியக் கொடியை அவமதித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீதான புகார் மீது விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

தேசியக் கொடியை அவமதித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீதான புகார் மீது விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முகப்பேரை சேர்ந்த. குகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சுதந்திர தினத்தன்று, தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
 இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி புகார் அளித்துள்ளேன்.

பாரதிய ஜனதா கட்சிக் கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கௌரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றமாகும். எனவே  எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கார்த்திக், பாஜக கட்சி கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கௌரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம். எனவே எல்.முருகன் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் பிரபாவதி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் குகேஷ் அளித்த புகார், மாம்பலம் காவல் நிலைத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் மாம்பலம் காவல் நிலையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். மேலும் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காவல்துறை தாக்கல் செய்வதற்காக விசாரணையை  4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →