இருதரப்பு மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு; மக்கள் சாலை மறியல்
விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, (50) விவசாயி. எதிர் வீட்டை சேர்ந்தவர் அங்கப்பன் (45). விவசாயி. இவர்கள் இருவருக்கும் ஏரியில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தது குறித்து முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு கந்தசாமி தனது குடும்பத்தாருடன் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அங்கப்பன் தரப்பினர் தெருவில் பட்டாசு வெடிக்கக் கூடாது என அவர்களைத் தடுத்துள்ளனர் .
இதனால், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு அங்கப்பன் தரப்பினர் கந்தசாமியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது தகராறை தடுக்க வந்த கந்தசாமி தரப்பை சேர்ந்த வினோத் (30), ராஜாங்கம்(45) ஆகிய இருவரையும் அங்கப்பன் தரப்பினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகராறில் கந்தசாமி, வினோத், ராஜாங்கம் மற்றும் எதிர்த் தரப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகராறு குறித்து புகார் கொடுப்பதற்காக விக்கிரவாண்டி காவல் நிலையம் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கரை, தகராறில் ஈடுபட்டவர்களோடு சேர்த்து காவல்துறையினர் உட்கார வைத்தனர்.
தகவல் அறிந்த தொரவி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்-வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் ஏற்பட்டதால் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.