தமிழ்நாடு

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி: தங்கக்கவச அலங்காரத்தில் குருபகவான்

DIN

நீடாமங்கலம்: அருள்மிகு குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் ஆனதையடுத்து, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அருள்மிகு குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சிவிழா நடைபெற்றது.

குருபகவானுக்கு மகா தீபாராதனை.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98 வது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். திருவாருர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகார ஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது. பார்க்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது. அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது. மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது. 

2. சந்தனகாப்பு அலங்காரத்தில் கலங்காமற்காத்த வினாயகர்.

பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மானிக்கப்பட்டதாகும் இத்திருக்கோயில். அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க, மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது. 

3. சந்தனகாப்பு அலங்காரத்தில் ஆபத்சகாயேஸ்வரர்.

திருஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அருள்மிகு குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு வழக்கம் போல் இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. 

4.சந்தனகாப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலியம்மன்.

சிறப்பு யாகம் - குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம் - காலம் 1.  இரவு 8 மணிக்கு பூர்ணாஹீதி, பஞ்சமூர்த்திகள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு மகாயாகம் காலம் - 2. காலை 7.45 மணிக்கு பூர்ணாஹீதி, காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

5.சந்தனகாப்பு அலங்காரத்தில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர்.

முன்னதாக அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலங்காமற்காத்த வினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் ஆகிய சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

6. தங்கக்கவச அலங்காரத்தில் உற்சவதெட்சிணாமூர்த்தி.

கெஜலெட்சுமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவ தெட்சிணாமூர்த்தி தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளானோர் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே குருப்பெயர்ச்சி விழாவில் ஒரு மணிநேரத்திற்கு 200 பேர் வீதம் 14-ம்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆன்லைன் பதிவு பற்றி தெரியாத வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால் அவர்களின் நலன் கருதி நேரடி கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

7.சந்தனகாப்பு அலங்காரத்தில் சனீஸ்வரபகவான்.

அமைச்சர்ஆர்.காமராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்டோர் குருபெயர்ச்சி விழாவில் கலந்துகொண்டனர். குருப்பெயர்ச்சி விழா ஹோமம். அபிஷேகம். குருப்பெயர்ச்சி மஹா தீப ஆராதனை உள்ளிட்ட வை யுடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் அர்ச்சனை பரிகார பூஜைகளில் நேரிடையாக கலந்து கொள்ள அனுமதிக்கபடவில்லை. 

குருபகவானுக்கு மகா தீபாராதனை.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் சுவாமியை தரிசிக்க  tnhrce.gov.in என்ற இணைய தல முகவரியில் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம் . இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் திருக்கோயில் தக்கார் ஹரிகரன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் பி. தமிழ்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT