முகப்பு
தமிழ்நாடு

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலை ஒட்டி சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி உள்ளிட்ட துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை
பகிர்:

திருவொற்றியூர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலை ஒட்டி சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி உள்ளிட்ட துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து துறைமுகங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களில் திங்கள்கிழமை மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 6-ம் எண் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.   

கடும் புயலானது துறைமுகத்துக்கு அருகே கரையை கடக்க உள்ளது என்பதை குறிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் ஏற்றுமதி - இறக்குமதி பணிகள் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. துறைமுகங்களில் உள்ளே நிற்கும் கப்பல்கள் உடனடியாக ஆழ்கடல் பகுதியை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றன. 

இதேபோல் துறைமுகங்களுக்கு வருகைதர  காத்திருக்கும் கப்பல்களும் ஆழ்கடல் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு நங்கூரம் இடப்பட்டுள்ளன. வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப துறைமுக நிர்வாகங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுவாக 11 வரிசை எண்களில் புயல் எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. முதலாவது எச்சரிக்கை என்பது வெகுதூரத்தில் புயல் ஒன்று உருவாகியுள்ளது என்பதை குறிக்கும். இதேபோல் புயலின் தாக்கத்திற்கு ஏற்ப எச்சரிக்கை எண்கள் வேறுபடும்.

எச்சரிக்கை எண்கள் 8, 9, 10 ஆகியவை மிகவும் மோசமான புயல் தாக்குதல்களை அறிவிக்கும் விதமாகவும் வானிலை மையத்துடன் முற்றிலுமாக தகவல் தொடர்பு  துண்டிக்கப்படும் நிலையில் இறுதியாக  எச்சரிக்கை எண் 11  அறிவிக்கப்படும் என துறைமுக தகவல் குறிப்பேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் எச்சரிக்கை எண்கள் சில துறைமுகங்களில் கூண்டுகள் ஏற்றப்படுவது மூலமாகவும் சில துறைமுகங்களில் அதிநவீன ஒளிவிளக்குகள் மூலமாகவும் எச்சரிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →