வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக உடனடியாக சட்டப்பேரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக உடனடியாக சட்டப்பேரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “வேளாண்மை” தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. அதே போல் “நிலம் - நிலம் சார்ந்த சுவாதீன உடன்படிக்கை” ஆகியவை மாநிலப் பட்டியல் 18-ல் இருக்கிறது. இவை தவிர, மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் 46, 47, 48 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகவும், ஒன்றோடு ஒன்று இணைத்தும் படித்துப் பார்த்தால் - வேளாண்மையைப் பொறுத்தமட்டில், சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருக்கிறது. ஆகவே இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது; ஏற்றுக் கொள்ளவும் இயலாது.
அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரத்தை மனதிலே கொண்டுதான் இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த இரண்டு வேளாண் சட்டங்களுக்கும் எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.
விவசாயிகளுக்குக் கடுமையான நீண்டகாலப் பாதிப்பினை ஏற்படுத்தும் இச்சட்டங்கள் குறித்து விவாதித்து, உரிய தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்ட பரிந்துரை செய்யுமாறும்; “அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்- 2020 (சட்டம் 22 - 2020) உள்ளிட்ட இம்மூன்று சட்டங்களுக்கும் எதிராகத் தமிழ்நாடு அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றும்; தமிழக வேளாண்மை மற்றும் விவசாயப் பெருமக்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க, இந்த நடவடிக்கைகள் மிகமிக அவசரமும் அவசியமும் ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டுமென்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தை தி.மு.கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், கே.எஸ்.இரவிச்சந்திரன், ப.தாயகம் கவி மற்றும் ஆர்.டி.சேகர் ஆகியோர் முதல்வரின் செயலாளரிடம் வழங்கினர்.