முகப்பு
தமிழ்நாடு

பேளூரில் கரோனா தொற்று அதிகரிப்பு: கடைகளை அடைத்து மக்கள் சுய பொதுமுடக்கம்

பேளூர் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று வியாழக்கிழமை முதல் வரும் 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் சுய பொதுமுடக்கத்தில் ஈடுபட

Updated On : 8 அக்டோபர், 2020 at 12:04 PM
பேளூரில் இன்று சுய பொதுமுடக்கத்தால் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

வாழப்பாடி: பேளூர் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று வியாழக்கிழமை முதல் வரும் 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் சுய பொதுமுடக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி பேளூர் பேரூராட்சி முழுவதும் வெறிச்சோடி கிடந்தது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பேளுரில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் கடைவீதி.

Advertisement

இந்நிலையில், கரோனா தொற்றில் இரு தினத்திற்கு முன், பூக்கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு, பேளூர் பகுதியில் இயங்கும் மளிகை கடைகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை, பேக்கரிகள்,  செல்லிடப்பேசி கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் காய்கறிகள், பழக்கடை சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வணிகர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர், 

மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் கடைவீதி.

ஆலோசனையின் முடிவில் இன்று வியாழக்கிழமை காலை முதல் அக்டோபர் 15 ஆம் தேதி புதன்கிழமை இரவு வரை சுய முழு பொது முடக்கத்தை கடைபிடிப்பதெனவும், அக்16 ஆம் தேதி வியாழக்கிழமை வழக்கம்போல் கடைகளை திறக்கவும் முடிவு செய்தனர்.

இதனையடுத்து இன்று வியாழக்கிழமை காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு சுய பொதுமுடக்கம் நடைமுறைக்கு வந்தது. மக்கள் நடமாட்டமின்றி பேளூர் பேரூராட்சி முழுவதும் வெறிச்சோடி கிடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.