தத்கல் மின் இணைப்பு கோரி 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அமைச்சர் பி. தங்கமணி
தத்கல் மின் இணைப்பு கோரி 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்க வந்த மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விவசாயிகளுக்கு தத்கல் முறையில் மின் இணைப்பு வழங்கும் வகையில் மின்வாரிய அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 31ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் பெறப்படும்.
விவசாயிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை சுமார் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விவசாயிகள் யாரிடமும் விண்ணப்பங்கள் பெறமாட்டோம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கக் கூடாது. அக்டோபர் 31 வரை ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமை தகவல் அளிக்கும் என்றார்.
Advertisement
சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா கூறியது: சத்துணவு பணிக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் வந்துள்ளன. நேர்காணல் நடத்தும் போது கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால் தற்போது பணியிடத்திற்கான ஆள்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாகவே இந்த ஆள்கள் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.