மானாமதுரையில் இடிதாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ நிதியுதவி
மானாமதுரை குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் சுந்தர் மகன் உதயமூர்த்தி கடந்த சனிக்கிழமை மாலை மானாமதுரை வைகையாற்றில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தார்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இடிதாக்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் நெட்டூர் எஸ்.நாகராஜன் நிதியுதவி வழங்கி, இளையான்குடி ஒன்றியம் சூராணத்தில் மழையால் சேதமடைந்த துப்புரவுத் தொழிலாளியின் வீட்டை பார்வையிட்டு அவருக்கு பசுமை வீடு கட்டித்தருவதாக உறுதியளித்தார்.
மானாமதுரை குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் சுந்தர் மகன் உதயமூர்த்தி கடந்த சனிக்கிழமை மாலை மானாமதுரை வைகையாற்றில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தார். இவரது உடல் மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது அங்கு சென்ற மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் நெட்டூர் எஸ்.நாகராஜன் உதயமூர்த்தி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ 5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக இளையான்குடி ஒன்றியம் சூராணத்தில் தமிழக அரசின் மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமில் சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சூராணம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஜெயா தனது வீடு மழையால் சேதமடைந்து விட்டதாகவும், தற்போது மேற்கூரை இல்லாமல் வீடு இருப்பதாகவும் கூறி சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜன் காலில் விழுந்து கதறி அழுதார்.
அதைத்தொடர்ந்து அங்கு வயல்காட்டுக்குள் சகதியில் நடந்து சென்று நாகராஜன் சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்டார். பின்னர் துப்புரவுத் தொழிலாளி ஜெயாவுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து நிதியுதவி வழங்கி பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் உறுதியளித்தார்.
பின்னர், அதிகாரிகளை தொடர்புகொண்ட அவர் ஜெயாவுக்கு பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இளையான்குடி ஒன்றியத் தலைவர் முனியான்டி உள்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.