குவிண்டால் ரூ. 6,000-க்கு கீழ் குறைந்த மஞ்சள் விலை: விவசாயிகள் கவலை
ஈரோடு சந்தையில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 6,000-க்கு குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு: ஈரோடு சந்தையில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 6,000-க்கு குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. குறிப்பாக காளிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் தொடர்ந்து 10 மாதங்கள் தண்ணீர் திறக்கப்படுவதால் இங்கு மஞ்சள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள் தரமாக இருப்பதால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பலர் மஞ்சளை அதிகமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம், ஈரோடு செம்மாம்பாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. இந்த சந்தைகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை குறைவாகக் காணப்பட்டது.
Advertisement
ஒரு குவிண்டால் சுமார் ரூ. 6,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மஞ்சளின் விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு செல்வதில் தயக்கம் காட்டி வந்தனர்.
கரோனா பாதிப்பு தொடரும் நிலையில், கிருமிநாசினியான மஞ்சள் தேவை அதிகரித்து, விற்பனை சூடுபிடிக்கும் என்றும் அதனால் விலையில் ஏற்றம் ஏற்படும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த சில நாள்களாக மஞ்சளின் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்து வருவது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து விலை குறைந்து கொண்டே வருவதால், விவசாயிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வருவதையும் தவிர்த்து வருகின்றனர். இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தைக்கு 1,000 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது 500 மூட்டை அளவுக்கு குறைந்துவிட்டது. விரலி, கிழங்கு மஞ்சள் இரண்டுமே குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரையிலும் விலை போகிறது. மஞ்சளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது: கரோனா பாதிப்பு காரணமாக திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் மஞ்சளின் தேவையும் குறைந்து இருக்கலாம். மேலும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இலங்கையில் வெளிநாட்டில் இருந்து மஞ்சள் கொள்முதல் செய்ய திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொண்டு செல்லப்படும் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அந்த மாநில அரசு சார்பில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,800-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மஞ்சள் தற்போது ஏலம் முறையில் அந்த அரசு விற்பனை செய்கிறது. இதில் ஒரு குவிண்டாலுக்கு சந்தை விலையில் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. இந்த மஞ்சளை மற்ற மாநில வியாபாரிகள் வாங்குவதால் ஈரோடு சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
தீபாவளி பண்டிகையின்போது நுகர்வு அதிகரித்தால், மஞ்சளின் விற்பனையும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஈரோடு மஞ்சளின் விலை குறைந்துவிட்டதாக முழுமையாகக் கூற முடியாது. அவசர பண உதவி தேவைப்படும் விவசாயிகள் மட்டும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல்கிறனர். விலை கிடைக்கும் நம்பிக்கையில் மஞ்சளை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் தரமான மஞ்சள் விற்பனைக்கு வரும்போது விலையும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.