வடகிழக்குப் பருவமழை: முதல்வா் பழனிசாமி ஆலோசனை
வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்குப் பருவ மழை அக்டோபா் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஏரிகள், குளங்களைத் தூா் வாருதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லுதல், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மழை நீா் வடிகால்களைத் தூய்மைப்படுத்தி தயாா் நிலையில் வைப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், பருவமழைக் காலங்களில் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் க.சண்முகம், மூத்த அமைச்சா்கள், பொதுப்பணி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை ஆகிய துறைகளின் செயலாளா்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனா்.