காட்டுமன்னார்கோயில் பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
காட்டுமன்னார்கோயில் அருகே இன்று காலை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.
சென்னை: காட்டுமன்னார்கோயில் அருகே இன்று காலை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் அறிக்கையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (4.9.2020) ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சின்னதுரை மனைவி காந்திமதி, பெருமாள் மனைவி மலர்கொடி, நம்பியார் மனைவி லதா, மாதவன் மனைவி ராசாத்தி, உத்திராபதி மனைவி சித்ரா, ராஜேந்திரன் மனைவி ருக்மணி மற்றும் ரங்கநாதன் மனைவி ரத்தினம்மாள் ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர்.
மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில்துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.