முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்லும் பேருந்து சேவை தொடங்கியது

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து சேவை இன்று காலை முதல் தொடங்கியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பேருந்து சேவை தொடங்கியது.
பகிர்:

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து சேவை இன்று காலை முதல் தொடங்கியது. 

தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த மாா்ச்25-ஆம் தேதி முதல் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், படிப்படியாக அளிக்கப்பட்ட தளா்வையடுத்து, இன்று முதல், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து சேவை இன்று காலை முதல் தொடங்கியது. 

சென்னை கோயம்பேட்டிலிருந்து இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்லும் பேருந்து சேவை இன்று காலை 5.30 மணிக்குத் தொடங்கியது. சுமார் 400 பேருந்துகள் வரை இன்று சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளதாகவும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கிருமிநாசினி தெளிக்கும் கருவி மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து சமூக இடைவெளியுடன் பேருந்தில் பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.