5 மாதங்களுக்குப் பின்னர் வெளிமாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி பேராலயத்தில், கடந்த 5 மாதங்களுக்குப் பின்னர் வெளி மாவட்ட பக்தர்கள் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம்: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி பேராலயத்தில், கடந்த 5 மாதங்களுக்குப் பின்னர் வெளி மாவட்ட பக்தர்கள் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் வழிபாடு மேற்கொள்வது வழக்கம். அதேபோல, இத்தலத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் ஆண்டுப் பெருவிழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பதும் வழக்கம்.
இந்த நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என்பதால், அது கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவால் விடும் என்பதைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது.
அண்மையில் பொது முடக்க தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கவும், பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கவும் உத்தரவிட்டது.
இருப்பினும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால், பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின் அனுமதிக்கு மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை விதித்தது.
பேராலய ஆண்டுப் பெருவிழா நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும், பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவடையும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை வெளி மாவட்ட பக்தர்கள் பேராலயத்தில் வழிபட அனுமதி கிடையாது எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, தமிழக அரசின் தளர்வுக்குப் பின்னரும் இங்கு பக்தர்களின் அனுமதிக்குத் தடை நீடித்து வந்தது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (செப். 8) மாதா பிறந்த நாள் மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 5 மாதங்களுக்குப் பின்னர், வெளி மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலய வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, கடலூர் உள்பட பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் புதன்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து வழிபாடு மேற்கொண்டனர்.
நீண்ட நாள்களுக்குப் பின்னர் பக்தர்களின் வருகை முழுமையாக அனுமதிக்கப்படுவதையொட்டி, புதன்கிழமை காலை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பேராலய அதிபர் ஏ.எம்.ஏ பிரபாகர் திருப்பலியை நிறைவேற்றினார். அருட்சகோதரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.
பேராலய வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பேராலயத்துக்குள் நுழையும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்துகொள்ள கிருமி நாசினி வழங்கவும், பக்தர்களின் உடல் வெப்ப நிலையை அறிய வெப்பமானி சோதனைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேராலயத்துக்கு பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளதையொட்டி, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த காணிக்கை பொருள்கள் விற்பனைக் கடைகள், மெழுகுவர்த்தி விற்பனைக் கடைகள், உணவகங்கள் போன்றவைகளும் வேளாங்கண்ணியில் புதன்கிழமை திறக்கப்பட்டன.